முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்திலேயே முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட சமூக நலத்திட்டங்கள் முழுமையாக சென்று சேர்ந்திடாத அவல நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் ஞாயிறன்று (டிச. 27) நடந்தது. அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில், ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் புவனேஸ்வரி செந்தில்குமார், கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் மருத்துவர் பிரபு ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது. 400- க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டு, உள்ளூரில் நிலவும் அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து பேசினர்.
விவசாயக் கூலிகள், 100 நாள் வேலைத்திட்ட கூலிகள், கட்டடத் தொழிலாளர்கள், கல் உடைக்கும் தொழிலாளர்கள் நிறைந்த மேட்டுப்பட்டி ஊராட்சியில், சாபக்கேடு போல் கணவரை இழந்த, ஆதரவற்ற விதவைகள் கணிசமாக உள்ளனர். அவர்களில் பலருக்கு, அரசு வழங்கும் ஆதரவற்ற விதவை மற்றும் விதவை உதவித்தொகை 1000 ரூபாய் இதுவரை வழங்கப்படாதது மக்கள் கிராமசபைக் கூட்டத்தின் வாயிலாக தெரிய வந்தது. சொந்த வீடோ, நிரந்தர வருவாயோ இல்லாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் இவர்களுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் முழுமையாகப் போய்ச்சேரவில்லை. பாதிக்கப்பட்ட பல பெண்கள் இப்பிரச்சனைக் குறித்து பேசினர்.
கந்தம்மாள், மலர், வள்ளியம்மாள், கோவிந்தம்மாள், பழனியம்மாள், விஜயா, முத்துலட்சுமி, சரசு, பாக்கியம் உள்ளிட்ட பல பெண்கள், தங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர், இவர்களிடம் உதவித்தொகை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் 1,000 வசூலித்துக்கொண்டு, உதவித்தொகை பெற்றுத்தராமல் மோசடி செய்துள்ளதாகவும் கூறினர்.
சாந்தி என்பவர் கூறுகையில், ''மேட்டுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புதூரில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கே பகுதிநேர ரேஷன் கடை திறக்க வேண்டும் என்றும், சாலையைக் கடந்து செல்லும்போது விபத்து அபாயம் உள்ளதால் அந்தப்பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும்,'' என்றார்.
காவல்துறையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் என்ற காவலர் ஒருவரும் உள்ளூர் மக்கள் பிரச்னைகள் சிலவற்றை பட்டியலிட்டார். அவர் பேசுகையில், ''உழைக்கும் மக்கள் அதிகளவில் வசிக்கும் மேட்டுப்பட்டியில் பல வீடுகளில் தனிநபர் கழிப்பறை வசதி கிடையாது. குறைந்தபட்சம் பெண்களுக்கு மட்டுமாவது பொதுக்கழிப்பறை கட்டித்தர வேண்டும்.
மேட்டுப்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி கட்டடம் சிதிலமடைந்து கிடக்கிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற அபாய நிலையில் உள்ள கட்டடத்தில் மாணவர்களை அனுமதித்து வருகின்றனர். மேலும், பள்ளிக்குச் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரத்தில் குடிகாரர்கள் பள்ளி வளாகத்தை திறந்தவெளி மதுக்கூடமாக பயன்படுத்துகின்றனர். வேறு பல சமூக விரோத செயல்களும் நடக்கின்றன. எம்.பி. நிதியிலிருந்தாவது இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக சுற்றுச்சுவருடன் கூடிய பாதுகாப்பான கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும்,'' என்றார்.
மேட்டுப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரா ராஜகேசவன் இருந்து வருகிறார். இவர் கடைசியாக உள்ளாட்சித் தேர்தலின்போது ஓட்டுக்கேட்டு வந்ததோடு சரி. அதன்பிறகு மக்களை சந்திக்கவில்லை என்றும், ஊராட்சிமன்றத் தலைவர் அலுவலகம் திறக்கப்படாமல் பூட்டுப் போட்டுக் கிடப்பதாகவும் கூறினர்.
காளியம்மாள் என்பவர் கூறுகையில், ''சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலைக்கு தெற்கு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த சாலையின் வடக்குப்பகுதியில் உள்ள மேட்டுப்பட்டி, எஸ்.என்.மங்கலம், கருமாபுரம், எம்.பெருமாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் சாலையைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வாறு பள்ளிக்குச் செல்லும்போது கடந்த காலங்களில் 100- க்கும் மேற்பட்ட முறை சாலை விபத்துகளில் மாணவர்கள், அவர்களுடன் செல்லும் பெற்றோர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஆகையால் விபத்து அபாயத்தைத் தவிர்க்க சாலையின் குறுக்கே மேம்பாலம் கட்டித்தர வேண்டும்,'' என்றார்.
கிராம சபைக் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், அ.தி.மு.க. அரசின் ஊழல் முறைகேடுகளால் ஏற்பட்ட அதிருப்தியால் அக்கட்சியை நிராகரிக்கிறோம் என அச்சிடப்பட்ட பதாகையில் ஆர்வத்துடன் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வெங்கடராசு, செந்தில், பாரதி ஜெயக்குமார், ரங்கநாதன், ராஜூ, மணிகண்டன், மணி உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் குறித்த குற்றப்பத்திரிகை துண்டறிக்கைகளை வழங்கி, தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தனர்.