Skip to main content

நிறைவேறாத விவேக்கின் கனவு... உருகும் ரசிகர்கள்...

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

vivekh's unfulfilled dream

 

திரைப்பட நடிகர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

எண்பதுகளின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தொண்ணூறுகளின் இறுதிக்குள் தன்னைத் தவிர்க்க முடியாத நகைச்சுவை நட்சத்திரமாக நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகர் விவேக். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1987-ல் வெளியான 'மனதில் உறுதிவேண்டும்' என்ற படமே நடிகர் விவேக்கின் அறிமுகப்படம். இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகம் செய்யப்பட்ட ரஜினிகாந்த், கதாநாயகனாகத் தொட்ட உயரத்திற்கு இணையான உயரத்தை, நடிகர் விவேக் தமிழ் காமெடி உலகில் தொட்டவர்; நகைச்சுவையான நடிப்பின் மூலம் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் சமூக கருத்துகளை விதைத்தவர்.

 

திரையில் சமூக கருத்துகள் பேசுவதோடு நின்றுவிடாமல், நிஜ வாழ்க்கையிலும் சமூகத்தின் நலனுக்காக உழைத்தவர் விவேக். பல்வேறு அறக்கட்டளைகள் மூலமாகக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகியவற்றிற்காகவும் பாடுபட்டார் விவேக். இந்நிலையில், விவேக்கின் உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது நிறைவேறாத ஒரு கனவு குறித்த பதிவு சமூகவலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. 

 

சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளுக்காக உழைத்த விவேக், தனது வாழ்நாளில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்தார். இதற்காக அவர் கடினமாக உழைத்தும் வந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதுவரை சுமார் 33.23 லட்சம் மரக்கன்றுகளை விவேக் நட்டுள்ளார். அவரது கனவான ஒரு கோடி மரங்கள் என்ற இலக்கினை அடைவதற்குள் விவேக் உயிரிழந்துள்ள நிலையில், அவரது இந்த கனவு நிறைவேறாமலேயே அவர் நம்மைப் பிரிந்துவிட்டார் என ரசிகர்கள் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் உருக்கத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக்கின் நினைவு தினம் - மரக்கன்றுகள் நட்டு நடிகர்கள் அஞ்சலி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Vivek's Memorial Day Actors vaibhav cell murugan Tribute Planting trees

'சின்னக் கலைவாணர்' என ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகர் விவேக், தமிழ் திரைத்துறையில் வெறும் நகைச்சுவை மட்டுமின்றி, சமூகங்களில் நிகழ்ந்த அவலங்களைத் தனது நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். நடிப்பைத் தாண்டி பல லட்ச மரக்கன்றுகளைத் தமிழகம் முழுவதும் நட்டு வைத்த நடிகர் விவேக், இளைஞர்கள் மரக்கன்றுகளை அதிகளவில் நட வேண்டும் என்றும் ஊக்கப்படுத்தினார். 

இதனிடையே கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக விவேக் மரணம் அடைந்தார். இவரது மறைவு  ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மறைவையொட்டி பலரும் விவேக்கின் நினைவாக மரக்கன்றுகள் நடும் முயற்சியில் ஈடுபட்டனர். இது அவ்வப்போது நடந்து வரும் நிலையில், கடந்த மாதம் நடந்த விவேக்கின் மூத்த மகள் தேஜஸ்வினி திருமணத்தில் கூட மணமக்கள் மரக்கன்றுகள் நட்டனர். மேலும் திருமணத்திற்கு வந்து வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றுகளைப் பரிசாக வழங்கினர். 

இந்த நிலையில் இன்று (17.04.2024) விவேக்கின் மூன்றாவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவாகப் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே விவேக்கின் மேலாளராகவும், நடிகராகவும் வலம் வந்த செல் முருகன் மற்றும் வளர்ந்து வரும் நடிகர் வைபவ் ஆகிய இருவரும் விவேக்கின் 3ஆவது நினைவு தினத்தையொட்டி, மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.