மத்திய பாஜக அரசு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைத்துள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வருவார்கள் என்ற வியூகங்கள் கிளம்பியுள்ளன.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் தொடங்க உள்ள நிலையில் நாளை மறுநாள் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்துகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் கார்கே வீட்டில் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக எம்.பிக்கள் கூட்டத்தை நடத்த இருக்கிறது. இதற்கான அறிவிப்பை திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். அறிவிப்பின்படி, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் நிலையில், திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.