பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்து, தி.மு.க. தமிழகம் முழுக்க கண்டனப் போராட்டம் நடத்தியது.
குறிப்பாக தென்காசியில் மாவட்டச் செயலாளர் சிவபத்மநாபன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினரும், தி.மு.க.வின் மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவாவின் அனல் தெறிக்கும் பேச்சுதான் முத்தாய்ப்பாக இருந்தது.
அவர் தன் உரை வீச்சில், "ரிசர்வ் வங்கியிடமிருந்து உபரிநிதி ரூபாய் 1 லட்சத்து 75 ஆயிரம் கோடியைப் பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடன்களைத் தள்ளுபடி செய்கின்றனர். அதே சமயம் மாணவ, மாணவியர் கல்விக் கடனாக 4 லட்சம் பெற்றால் அவர்கள் வட்டியுடன் சேர்த்து 7 லட்சமாகத் திரும்பச் செலுத்த வேண்டும். கடனோ, வட்டிச் சலுகையோ, தள்ளுபடியோ கிடையாது. இதுதான் நியதி. மத்திய, மாநில அரசுகள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு வரியாக 52 ரூபாய் வசூல் செய்கின்றன. அரசின் எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் 6 ஆயிரம் கோடி நஷ்டத்தில் உள்ள நிலையில், தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் கம்பெனி 30 ஆயிரம் கோடி லாபம் ஈட்டுகிறது. எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்.
அதைத் தொடர்ந்து பேசியவர், "450 வரை விற்கப்பட்ட கேஸ் சிலிண்டரின் விலை, இன்று 850 ரூபாய்க்குப் பறந்துள்ளது. விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யலாம். அரசு விவசாயிகளிடமிருந்து அதிக விலைக்கு விளைப்பொருட்களைக் கொள்முதல் செய்யும். நாட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யும். இடையிலுள்ள இழப்புத் தொகையை அரசே மானியமாகச் செலுத்திவிடும் இதுதான் வழக்கமான நடைமுறை. பெட்ரோல் டீசல் விலையை அரசே நிர்ணயம் செய்த முறையை மாற்றி எண்ணெய் நிறுவனங்களிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டனர்.
மத்திய, மாநில அரசுகளின் கலால் வரி வசூலே இன்றைய விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். இதற்குத் தீர்வு, அமைதி வழியில் புரட்சிதான். அதுதான் வாக்குச் சாவடியில் செய்யும் புரட்சி. நல்லவர்களின் வேதனைகளைப் புரிந்தவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும்" என்றார் அனல் தெறிக்க.