ராஜபாளையம் தொகுதி மக்களின் நலனுக்காகத் தனது எம்.எல்.ஏ. சம்பளத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டவர் தங்கபாண்டியன். அவருடைய 87 மற்றும் 88வது மாத எம்.எல்.ஏ. ஊதியமான ரூ.2,10,000 பணத்தைத் தனது தொகுதியில் வசிக்கும் பி.சுவேதாலட்சுமி, சிவன்ராஜ், ப.ஜெயமுருகன், எம்.அழகேஷ்வரி, சி.வினோதா, எஸ்.லலிதா, எஸ்.எஸ்.தர்மராஜாத்தி, பிரவீன்குமார், எம்.வெங்கட்ராமன், மணிமேகலை, மீனாட்சி, கணேசராஜா, சத்தியா, பவித்ரா, ராஜா, பாலசந்தர் ஆகிய 16 மாணவ, மாணவியருக்கு மருத்துவம், வழக்கறிஞர், ஆசிரியர் படிப்பு, பட்டப்படிப்பு போன்ற மேற்படிப்பைத் தொடர்வதற்கு ஏதுவாக, கல்வி உதவித்தொகை வழங்கியிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலில் என்னால் முடிந்த உதவிகளைத் தொகுதி மக்களுக்குச் செய்துவருகிறேன். சில பெற்றோர்கள் என்னைத் தொலைப்பேசியிலும் நேரிலும் தொடர்புகொண்டு கல்வி உதவித்தொகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். உலக அளவிலுள்ள கல்விக்கு இணையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் கல்வி மேம்பட்டு வருகிறது. தமிழ்ப் புதல்வன், புதுமைப் பெண் திட்டம் மூலம் தரமான கல்வி கிடைக்கிறது. மாணவச் செல்வங்களான நீங்களும் சிறப்பாகப் பயின்று எதிர்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்.”என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது எம்.எல்.ஏ.க்கு நன்றி தெரிவித்துப் பெற்றோரும் மாணவர்களும் பேசியபோதுதான், ஒரு பெண் “வருஷாவருஷம் எங்க சாரு எங்க தொகுதிலயே ஜெயிக்கணும்..”எனப் பாராட்டினார்.