ஊரையே சுத்தமாக வைத்துக் கொள்ள தங்களை அசுத்தமாக்கிக் கொள்ளும் துப்புரவுப் பணியாளர்களுக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பு மிகக் குறைவு. தங்கள் உயிரைக்கூட பொருட்படுத்தாமல் தங்களை நம்பியுள்ள மக்களுக்காக தூய்மைப் பணியில் பிரதிபலன் பாராமல் வேலை செய்கிறார்கள்.
டெங்கு காலத்திலும் சரி, இப்போது கொடூரமான உயிர்கொல்லி கிருமி கரோனா பரவும் நிலையிலும்கூட, நோய் பரவாமல் தடுக்கும் முக்கிய பணியை இவர்களே செய்து வருகிறார்கள். கரோனா பரவல் தொடங்கியுள்ள நேரம் தொடங்கி, தற்போது வரை கிராமங்கள் முதல் நகரங்கள் வரை கூடுதல் பணியாக சுத்தம் செய்வது முதல் கிருமி நாசினி தெளிப்பது வரை செய்து வருகிறார்கள். இப்போதுதான் துப்புரவுப் பணியாளர்களின் மகத்தான பணி மக்களுக்கு புரியத் தொடங்கியுள்ளது.
கை உறைகூட இல்லாமல் சாக்கடையை சுத்தம் செய்துகொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு தற்போதுதான் கை உறையும், முகக்கவசமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சிப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை சந்தித்த தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் (திமுக), அவர்களுக்கு கையுறை, முகக்கவசம், உணவுப் பொருட்கள் வழங்கி உங்களால்தான் மக்கள் நோயின்றி வாழ்கிறார்கள், உங்கள் பணி தலைசிறந்த பணி என்று அவர்களை பாராட்டினார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த வாரம் மெய்யநாதன் எம்.எல்.ஏ. கரோனா பாதுகாப்புக்காக ரூ.25 லட்சம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை சின்னதாக பாராட்டினால் இன்னும் நன்றாகவே இருக்கும்.