கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், மாணவர்களுடன் நான் உரையாடுவதை தடுக்க எவருக்கும் உரிமை இல்லை. மரியாதையுடன் சொல்கிறேன், எவருக்கும் உரிமையில்லை. மேலும் இவர்கள் கட்டி வைத்த அரங்கில் நமக்கு பேச அனுமதி இல்லை என்றால், நாம் பேச வெட்டவெளி போதும்.
பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேச வேண்டாம் என சொல்கிறார்கள். ஆனால் அரசியல் பாடப்பிரிவை எடுத்துக்கொண்டவர்கள் என்ன செய்வார்கள். நாளை உங்கள் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கக் கூடியது அரசியல். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எது நல்ல அரசியல் என்று நீங்கள் பேச வேண்டும். ஓட்டு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். ஆனால் களத்திற்கு வாருங்கள். உங்கள் வயதில் நான் அரசியலில் வந்திருக்க வேண்டும். வராமல் இருந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அதனால் தான் நீங்களாவது இந்த வயதிலேயே வந்துவிடுங்கள் என்றார்.