
லாட்டரி சீட்டுகளால் பல குடும்பங்கள் அழிந்துவிட்டதால் தமிழக அரசு லாட்டரி சீட்டுகளைத் தடை செய்தது. ஆனாலும் தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை மறைமுகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. வெள்ளை தாளில் பெயர், தேதி, எண்கள் மட்டும் அச்சிடப்பட்ட ரூபாய் 100, 200, 500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மொத்தமாக இயந்திரங்களை வைத்து அச்சிடும் பெரிய கள்ள லாட்டரி கும்பல், சில்லறை வியாபாரிகள் மூலம் சாதாரண தினக்கூலி தொழிலாளிகளைக் குறிவைத்து, அவர்கள் வாங்கும் கூலியை அபகரித்துக் கொள்கிறது. இதனால் ஏராளமான குடும்பங்கள் வீதிக்குத் தள்ளப்பட்டுவிட்டது. ஆனாலும் கூட இன்னும் இதனைத் தடுக்க முடியவில்லை. போலீஸாருக்கும் தெரிந்தே இது நடப்பதாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், லாட்டரி சீட்டுகளை அச்சடிக்கும் பெரிய முதலாளிகளைப் பிடிக்காமல் சில்லறை வியாபாரிகளைப் பிடித்து வழக்குப் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர் அதிகாரிகள்.
இந்த நிலையில், "புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் ஏழை கூலித் தொழிலாளிகள் லாட்டரியால் அதிகம் பாதிக்கப்படுவதோடு, இதனால் ஆட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்கள். இப்படி ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் லாட்டரி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரி திமுக நகரத் துணை செயலாளர் பன்னீர்செல்வம் பொன்மராவதி நடுக்கல் பகுதியில் ஒரு கடையின் முன்பு பதாகையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.