முன்னாள் அமைச்சரும் தி.மு.க.வின் கரூர் மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி இன்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் "இந்த கரூர் மாவட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை மிகப்பெரிய அளவில் தில்லு முல்லுகள் செய்து பறிக்க நினைக்கிறது அ.தி மு க " என்றவர்,
“கரூர் மாவட்டத்தில் 1031 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில், மாவட்ட ஆட்சியர் துணையோடு, ஒவ்வொரு பூத்திலும் தி.மு.க.வுக்கு சாதகமான சுமார் 200 வாக்காளர்களை நீக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. இதற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி நேரடியாக களம் இறங்கி ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவினர் தயார் செய்து கொடுத்த வாக்காளர் பட்டியலை அப்படியே மாவட்ட ஆட்சியர் எடுத்துக் கொள்கிறார். ஆய்வும் செய்வதில்லை.
வெளியூர், வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் கரூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் 20 பேர்களை அந்த தொழிற்சாலை முகவரியில் வசித்து வருவதாக புதிய வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். இப்படி பலமுறைகேடு உள்ளது. நேர்மையாக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த அதிமுகவினர் குறுக்கு வழியில் இது போன்று புதிய யுத்தியை கையாண்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட ஆட்சியர் துணை போவது வேதனையாக உள்ளது.
பூத் லெவல் ஏஜெண்டுகளை வைத்து தான் கள ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டும் அதை பின்பற்றாமல் அதிகாரிகளை தன்னிச்சையாக அனுப்பி இதுபோன்ற குளறுபடிகளை மாவட்ட ஆட்சியர் செய்து வருகிறார். இதுபோன்ற தவறுகள் செய்வதை கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீதிமன்றத்தில் திமுக வழக்கு போடும் சூழல் ஏற்படும். என்றவர், கரூர் மாவட்டத்தில் புதிதாக கள்ள ஓட்டுகளை சேர்த்து வெற்றி பெற அதிமுக புதிய திட்டம் தீட்டினாலும் அது நடைபெறாது. .வருகின்ற சட்டமன்ற தேர்தல் தான் அதிமுக என்ற கட்சிக்கு இறுதி தேர்தலாகும்" என்றார்.