தேனி - அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 19 வார்டிலும், அதிமுக 7 வார்டிலும், காங்கிரஸ் 2, அமமுக 2, பாஜக 1 மற்றும் சுயேட்சை 2 வார்டு என வெற்றி பெற்றுள்ளன.
தேனி, அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நகர் மன்றத் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி சார்பாக 22வது வார்டு கவுன்சிலர் சற்குணம் என்பவர் நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற நகர்மன்றத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்பு மனுத் தாக்கல் செய்யவிருந்த நிலையில், 10வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் அவரை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தார். அதனால் மறைமுக தேர்தல் புறக்கணித்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டரங்கில் இருந்து வெளியே வந்தனர்.
கூட்டணி தர்தமத்தை மீறி நகர் மன்றத் தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் வேட்பு மனுத் தாக்கல் செய்ததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா நகர்மன்றத் தலைவராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தேர்தலுக்காக வருகை தந்தவர்கள் விபரம். திமுக கவுன்சிலர்கள் 19 பேர், காங்கிரஸ் 2 பேர், அமமுக 2 பேர், சுயேட்சை 2 பேர், அதிமுக 1, பாஜக 1 என 27 கவுன்சிலர்கள் வருகை தந்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் என மூன்று பேர் தேர்தலை புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர்.