Skip to main content

வேட்பாளர் நேர்காணலை தொடங்கிய திமுக, அதிமுக

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
DMK, AIADMK started interviewing candidates

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

திமுக நேற்று கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்கி அதற்கான தொகுதிப் பங்கீட்டு ஆவணத்தில் கையெழுத்திட்டு முடித்தது. அதிமுகவும் விருப்பமனுக்களை பெற்றிருந்தது. இந்தநிலையில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று ஒரே நாளில் வேட்பாளர் நேர்காணலை தொடங்கியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 2,984 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். இந்தநிலையில் திமுக சார்பில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டான் மற்றும் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். முதலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. நேர்காணலின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்புகள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். திமுக நடத்தும் வேட்பாளர் நேர்காணல் இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. இன்று 20 தொகுதிகளுக்கும் நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறுகிறது. இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெறுகிறது.


அதேபோல் அதிமுகவிலும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது. அதிமுகவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று 20  தொகுதிகளுக்கும் நாளை 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது.

சார்ந்த செய்திகள்