தீபாவளி பண்டிகைக்கு காரணமாக சொல்லப்படும் கதைகள் ஏராளம். அதில் வால்மீகி ராமாயணத்தில் கொடியவனான ராவணனை அழித்து தன்னுடைய வனவாசம் முடிந்து சீதையுடன் அயோத்திக்கு ராமர் திரும்புவதை விளக்கேற்றிக் கொண்டாடியதாகவும், சிவபெருமான் அசுரனின் தலையில் கைவைக்க வெடித்து சிதறியதாகவும் என இப்படி எண்ணற்ற கதைகளை சொன்னாலும் தீபாவளிக்கு என்று ஒரு வரலாற்று உண்மை இருப்பதாக தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் பேசியுள்ளார்.
தீபாவளி பண்டிகை குறித்து அவர் பேசியுள்ளதாவது, ''அக்காலத்தில் பெளத்த மடங்களில் தங்கியிருக்கும் அறவணடிகள் தங்களின் ஓய்வு காலங்களில் நேரத்தை வீணாக்காமல் பழங்களின் தன்மைகளையும், செடிகளின் தன்மைகளையும் மற்றும் உலோகங்களின் தன்மைகளையும் ஆராய்ந்து அதன் குணங்களையும் பயன்களையும் உறுதிசெய்த பின் அதை மன்னரிடத்தில் கூறி அவரின் ஒப்புதலுடன் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். அப்படி புதியதாய் ஒரு பொருளை கண்டுபிடிக்கும் நாளை புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை பண்புடன் உணவு பதார்த்தங்களை செய்து கொடுத்து கொண்டாடியதுதான் பின்னர் நாட்களில் பண்டிகையாக கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவில் பள்ளி என்னும் நாட்டை பகுவன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அரசனிடம் சென்ற அறவணடிகள் எள் எனும் தானியத்தின் மூலம் தயாரிக்கப்பட்டதை எண்ணையை கொடுத்து இது கபாலரோகம், சோமரோகம், மேகநோய், மலச்சிக்கல், எலும்புருக்கி, ஈளை ஆகிய நோய்களுக்கு இது மருந்தாக அமையும் மேலும் சுவையான பல பலகாரங்கள் தயாரிக்க பயன்படும் என எடுத்துரைத்தனர்.
அதனை மன்னன் பகுவன் ஆய்வு செய்து உறுதிசெய்த பின் நாட்டில் அதிகமாக எள்ளை விளைவித்து நாட்டு மக்களை வரவழைத்து கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய்யை கொடுத்து தலையில் தேய்க்கச் சொல்லியதோடு அந்நாட்டில் ஓடும் தீபவதி நதியில் நீராடச் செய்தான். மேலும் அந்த எள் நெய்யில் (நல்லெண்ணையில்) பலகாரங்கள் செய்து அனைவருக்கும் கொடுத்து மக்களை மகிழ்வித்தான். தீபவதி நதியில் நீராடிய அந்த நாளை மறவாமல் மக்கள் ஆண்டுதோறும் புத்தாடை உடுத்தி மற்றவர்களுக்கு ஈகை தானம் செய்து வழக்கம் போல் எள் எண்ணெயில் பலகாரங்கள் சமைத்து மகிழ்ச்சியாக கொண்டாடி வந்தனர். தீபவதி பண்டிகை காலப்போக்கில் மருவி தீபாவளி பண்டிகையானது.இந்த வரலாற்றை தாமாக சொல்லவில்லை. உறுதியான வரலாற்று தகவலை அயோத்திதாச பண்டிதர் பின்வரும் பெருந்திரட்டு பாடல் மூலம் உறுதி செய்கிறார்.
“பள்ளியம்பதிலூர்ந்த பகு வனார் கிழவகாலந் தெள்ளியலுழவிலூறுஞ் சேர்புநல் புஞ்சைவாவி எள்ளக வெண்ணெயாய்ந்த விடயமற்றவர்குறிப்ப வெள்ளியல்மற்றாகார மற்சிர மகிழ்வென்றாங்கே சிர முருவெள் நெய்மற்றுந் திரளொடு செந்நெலீய்ந்து கரமுகிலேந்திகங்கைக் கரை தீபவதியைநாடித் துரமுறத் தோய்ந்து நீரிற்று வைந்துமெய்யக நறப்ப பரவருமசதி மற்றும் பாயிலுமகலுமென்றான்” பெளத்தத்தின் வழிநின்று அயோத்திதாசர் கூறும் இச்செய்தி மூடத்தனம் ஏதுமின்றி பகுத்தறிவுக்கு உட்பட்டதாகும் விஞ்ஞான பூர்வமாகவும் உள்ளது.
பெளத்தத்தை பின்பற்றும் அண்டைய நாடுகளிலும் இதுபோன்ற இருப்பது இத்தகவலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முன்னோர் வழி நின்று கொண்டாடி மகிழ்வோம் தீபாவளி திருநாளை'' என தெரிவித்தார்.