தலைவாசல் அருகே விளக்கு பற்ற வைத்த போது தீ விபத்து ஏற்பட்டு கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் காமக்காபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தாரணி (19). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் கள்ளிப்புதூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி மாலை தாரணி சாமி கும்பிடுவதற்காக விளக்கேற்ற தீப்பெட்டியில் நெருப்பு பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தாரணி நைட்டியில் தீப்பற்றி அவர் உடல் கருகினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் தாரணி மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த தாரணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.