கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகேயுள்ள ரூபநாராயண நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவருக்கு இலவச வீட்டுமனை பட்டா மாற்றம் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனிடம் சென்ற பொழுது, சுப்பிரமணியன் பட்டா மாற்றம் செய்வதற்காக 3000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதேபோல் அந்த கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன், பிரபாவதி, பிரபாலட்சுமி, கோவிந்தசாமி, தாட்சாயிணி, சுகந்தி உள்ளிட்ட ஏழு பேரிடம் கிராம நிர்வாக அலுவலர் தலா 2000 ரூபாய் வீதம் 14,000 ரூபாய் கேட்டுள்ளார். அதையடுத்து, இதுகுறித்து ராமதாஸ் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அளித்த ஆலோசனையின் படி ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை நேற்று ராமதாஸ் உட்பட 7 பேர் தலா ரூ.2000 வீதம், 14 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக சுப்பிரமணியனைப் பிடித்தனர். பின்னர், சுப்பிரமணியனை கைது செய்து கடலூருக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.