திருமண கூடங்கள், விளையாட்டு அரங்கங்கள் உள்ளிட்டவைகளில் மதுபானம் விநியோகிக்க தமிழ்நாடு அரசு புதிதாக அரசாணை பிறப்பித்துள்ளது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; “நட்சத்திர விடுதிகள் மற்றும் கேளிக்கை கூடங்களில் இதுவரை மதுபானம் விநியோகம் செய்வதற்கு உரிமங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த சூழ்நிலையில் 1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுபான (உரிமம் மற்றும் அனுமதி) விதிகளில் திருத்தம் கொண்டு வந்துள்ளதாக ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகிறது. இந்தச் சிறப்புத் திருத்தத்தின் மூலம் திருமண அரங்குகள் விருந்து அரங்குகள். விளையாட்டு அரங்கங்கள். வணிக வளாகங்கள் போன்றவற்றில் மதுபானத்தை விநியோகம் செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணங்கள். விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்வுகளில் மதுபானம் எளிதில் கிடைக்க வழிவகுக்கும் இந்த திருத்தங்கள் ஆரோக்கியமானவை அல்ல. ஏற்கனவே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் வாகன விபத்துக்கள் மிக அதிகமாக நடைபெற்று வருகின்றன. பொது நிகழ்வுகளில் மதுபானம் விநியோகிக்க அனுமதி வழங்கினால் மோசமான சமுதாய சீரழிவையும் சாலை விபத்துகளையும் அதிகரிக்கச் செய்யும். உயிரிழப்புகளும் அதிகரிக்கக்கூடும்..
இந்த ஆண்டு 500 டாஸ்மாக் கடைகள் பூட்டப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து மக்களின் வரவேற்பைப் பெற்ற தமிழக அரசு மக்கள் நலன் கருதி திருமண மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வினியோகிக்க அனுமதிக்கும் இந்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும்” இவ்வாறு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.