சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வட்டம் கீழடியில் ஒன்பது கட்ட அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனையடுத்து கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வாராய்ச்சி பணிகளைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 18 ஆம் தேதி (18.06.2024) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக 14 இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு ஒன்றை ஏக்கர் பரப்பளவில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே மீன் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழி எழுத்துக்களுடன் கூடிய பானைகள் கிடைத்துள்ளது. இரண்டு பானைகள் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. பழங்கால தமிழர்கள் மிக நேர்த்தியாகப் பானையாக வடிவமைத்துள்ளனர்.
கீழடியில் இரண்டு பழங்கால பானைகள் கண்டறியப்பட்டுள்ள செய்தி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 6 அடி ஆழத்தில் இருந்து இரண்டு பானைகள் கிடைத்துள்ளன. மேலும் பானைகள் இருந்த இடத்தில் மூங்கில் கம்புகள் ஊன்றி கூரைகள் வேயப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூங்கில் கூரைகளைக் கரையான் அரைக்காமல் இருக்க ஆற்றல் மணல் போடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.