திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் - கரூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இடையே பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. பிரதீப் உத்தரவிட்டுள்ளார்.
வாகனங்ளில் ஆடு, மாடுகளை ஏற்றி செல்லவோ, கூடுதல் பாரங்களை எடுத்துச் சொல்வோரிடம் ரோந்து போலீசார் லஞ்சம் பெறுவது நீண்டநாட்களாக நடந்து வருகிறது. விட்டல்நாயக்கன்பட்டி அருகே லாரியை வழிமறித்த போது விபத்தில் சிக்கி போலீஸ்காரர் காயமடைந்ததும், நெடுஞ்சாலை ரோந்து வாகனம் சேதமடைந்ததும் ஏற்கனவே நடந்துள்ளன. இதனால் ரோந்து போலீசார் ஒட்டுமொத்தமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இருப்பினும் மாமூல் வசூல் குறையவில்லை. வேடசந்தூர் - கரூர் ரோட்டில் உள்ள மினுக்கம்பட்டியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் வசூல் செய்வது தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் வசூல் பணத்தை பிரிப்பதில் டிரைவர் குருமூர்த்திக்கும், போலீஸ் அருளானந்தம் என்பவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. காயமடைந்த அருளானந்தம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து வேடசந்தூர் டி.எஸ்.பி. துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் விசாரணை நடத்தி எஸ்.பி. பிரதீப்புக்கு அறிக்கை அளித்தனர். அதன் அடிப்படையில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.
ஆயுதப் படை போலீசாரே பெரும்பாலும் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் டிரைவராக பணிபுரிகின்றனர். இவர்கள் சட்டம் ஒழுங்கு பணியில் வேலை செய்ய விருப்பம் இல்லை என எழுதிக் கொடுத்துவிட்டு ரோந்து வாகன டிரைவர்களாகின்றனர். மாவட்டத்தில் உள்ள 15 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களில் மூன்று மாதத்திற்கு ஒரு வண்டி என இவர்களுக்குள் பண மாற்றம் செய்து கொள்கின்றனர். எஸ்.பி.யாக சரவணன் இருந்தபோது சீனியாரிட்டி அடிப்படையில் ஆயுதப்படை போலீசார் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு அனுப்பப்பட்டனர். அதற்கு பின் வந்த எஸ்.பி.க்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால் நெடுஞ்சாலை ரோந்து வளம் கொழிக்கும் பிரிவாக மாறி வருகிறது. மாவட்டத்தில் பல காவல்நிலையங்களில் வருமானம் பார்க்க வேண்டும் என்றே போலீஸ் அதிகாரிகள் பல லட்சங்களை கொடுத்து அந்தந்த ஸ்டேஷன்களுக்கு மாறி வந்து தங்களுடைய பாக்கெட் மணியை நிரப்பியும் வருகிறார்கள். இதற்கெல்லாம் புதிதாக வந்துள்ள மாவட்ட எஸ்.பி பிரதீப் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்தும் வருகிறார்கள்.