திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் ஒன்றியத்தில் இருக்கும் கலிக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 2006 மற்றும் அதனை தொடர்ந்து 2011ல் பதவி வகித்தவர் திருமதி. எ.புவனேஸ்வரி அருளரசன்.
இவர் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், நூறு நாள் வேலைத்திட்டம் மூலம் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வாரி சிறப்பாக பணியாற்றியதற்காகவும், கிராம ஊராட்சியின் தூய்மையை காப்பதில் முன்னுரிமை கொடுத்ததற்காகவும் இவருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிர்மல் புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.
அதன்பிறகு 2011ம் வருடம் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதில் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றியதற்காகவும், இவருக்கு மத்திய அரசின் உத்தமர் காந்தி விருது வழங்கப்பட்டது. நேற்று செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்த கலிக்கம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் புவனேஸ்வரி அருளரசன் மீண்டும் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்தார்.
மனுத்தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த அவருக்கு கலிக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மலர் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அனைவரிடமும் வாழ்த்து பெற்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் புவனேஸ்வரி அருளரசன் கூறுகையில், தி.மு.க மாநில துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக கிராம ஊராட்சியில் செயல்பட்டதால் தொடர்ந்து நான் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளேன்.
இம்முறையும் அவருடைய ஆசியுடன் மாபெரும் வெற்றி பெறுவேன். பொதுமக்களின் கோரிக்கைகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று கேட்டறிந்து செயல்பட்டதால் பொதுமக்கள் ஆதரவுடன் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளேன். இம்முறையும் வெற்றி பெறுவேன் என்றார். மனுத்தாக்கலின் போது ஆத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன், ஒன்றிய பொருளாளர் லட்சுமணன், வழக்கறிஞர் தேவராஜன், கலிக்கம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் அருளரசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.