ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் முன்னெடுக்கும் கரோனா நிவாரண உதவிகள் குறித்து உண்மையான ரிப்போர்ட் வேண்டுமென சமீபத்தில் உளவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி. இந்த உத்தரவு சீனியர் அமைச்சர்கள் பலருக்கும் தெரிந்து எடப்பாடி மீது கோபம் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக, வட மாநிலத்திலுள்ள சீனியர் அமைச்சர் ஒருவர், சக அமைச்சர்களிடம், இது குறித்து பகிர்ந்துகொண்ட போது, முதலில் இவரது மாவட்டமான சேலத்தில் என்ன நடக்கிறது? குறிப்பாக, அவரது தொகுதியான எடப்பாடியில் என்ன நடக்கிறது? எனத் தெரிந்து கொண்டு அதன் பிறகு நம்மை வேவு பார்க்கட்டும். அவரை விட நாம் நன்றாகத்தான் செய்து வருகிறோம். என்ன, அவரைப் போல நாம் விளம்பரப்படுத்திக் கொள்வது கிடையாது. நிவாரண உதவிகளில் என் மாவட்டத்தில் எந்தப் பிரச்சனையாவது வந்ததா? இல்லை. அவர் சொல்வதற்கு முன்பே அமைச்சர் என்கிற முறையில் என் மாவட்ட மக்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கையோ அதைச் செய்து வருகிறேன் எனப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
சீனியர் அமைச்சர் ஒருவரின் இந்த ஆதங்கம் உளவுத்துறை மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே தனது மாவட்டத்தில் அதுவும் தனது தொகுதியில் என்ன நடக்கிறது? என்பதை விசாரித்து ரிப்போர்ட் தருமாறு உளவுத்துறையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதல்வர். அதேசமயம், மாவட்ட கலெக்டரிடமும் ரிப்போர்ட் கேட்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் இரண்டு தரப்பினரிடமிருந்தும் எடப்பாடிக்கு ரிப்போர்ட் கொடுக்கப்பட்டதில், இரண்டு ரிப்போர்ட்டுகளும், சேலத்திலுள்ள அ.தி.மு.க.வினர் முதல்வரை ஏமாற்றுகிறார்கள் என்கிற ரீதியிலே இருந்தனவாம். தவிர, இரண்டு ரிப்போர்ட்டும் ஏறக்குறைய 80 சதவீதம் ஒத்துப்போயிருக்கிறது.
அதாவது, தனது தொகுதியிலுள்ள 1 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் முழுமையாகப் போய்ச்சேர வேண்டும் என அங்குள்ள பொறுப்பாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்திருக்கிறார் எடப்பாடி. அதற்கான நிதியையும் ஒதுக்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொறுப்பாளர்கள், குறிப்பாக எடப்பாடிக்கு நம்பிக்கையானவர்கள், தரமான நிவாரணப் பொருட்களை வழங்காமல் அதிகாரிகளின் துணையுடன் ரேசன் கடைகளில் உள்ள அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவைகளைப் பெற்று அதனை ஏழைகளுக்கு விநியோகித்திருக்கிறார்கள். இது குறித்து, மாவட்ட கலெக்டரிடம் புகாராகச் சொல்லியிருக்கிறார்கள் எடப்பாடி தொகுதிவாசிகள். இந்தச் சம்பவங்கள்தான் இரண்டு ரிப்போர்ட்டிலும் இருந்துள்ளது. ரிப்போர்ட்டை படித்துப் பார்த்துவிட்டு நொந்து போயிருக்கிறார் எடப்பாடி என்கிறது அதிமுக தலைமைக்கழக வட்டாரம்.