
சேலத்தில், பிறந்து 58 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெற்ற தந்தையே கடத்திச்சென்று விற்பனை செய்துள்ள சம்பவத்தில் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது.
சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கரடு தெற்கு பகுதி, காந்தி நகரை சேர்ந்தவர் விஜய். டாடா ஏஸ் வாகன ஓட்டுநர். இவருடைய மனைவி சத்யா (25). இவர்களுக்கு பவிஷா (6), மேகமித்ரா (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சத்யா, கடந்த நவ. 1- ஆம் தேதி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விஜய் விரக்தி அடைந்தார். மூன்று பெண் பிள்ளைகளையும் எப்படித்தான் வளர்த்து ஆளாக்கப் போகிறோமோ என்று மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.
இந்நிலையில், நவ. 15- ஆம் தேதியன்று, பிறந்து 15 நாள்களே ஆன தனது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்களிடம் காட்டிவிட்டு வருவதாக வெளியே சென்றார் விஜய். மாலையில் அவர் மட்டும் தனியாக வீடு திரும்பினார். குழந்தை இல்லாமல் கணவர் மட்டும் தனியாக வருவதைப் பார்த்து அதிர்ந்த சத்யா, குழந்தை எங்கே? என்று கேட்டார்.
ஒரே நேரத்தில் மூன்று பெண் குழந்தைகளையும் பராமரிக்க முடியாது என்பதால், சிறிது காலத்திற்கு உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொன்னார். கணவனின் பதிலில் சத்யாவுக்கு திருப்தி இல்லை. இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த நிஷா என்பவரிடம் தன் பெண் குழந்தையை கணவர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சத்யா, இதுகுறித்து உடனடியாக அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார்.
முதல்கட்ட விசாரணையில் விஜய், தன்னுடைய பெண் குழந்தையை ஈரோட்டைச் சேர்ந்த சித்ரா, நிஷா ஆகியோரிடம் 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலாமணி என்பவரிடம் குழந்தையை விற்றதும், இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்றிருப்பதும் தெரிய வந்தது. ராஜேஸ்வரியும் அந்தக் குழந்தையை பெங்களூருவைச் சேர்ந்த கீதா என்கிற மரிய கீதா என்பவரிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கும் தகவலும் கிடைத்தது.
பின்னர் அந்தக் குழந்தை கீதாவிடம் இருந்தும் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த சுந்தரராஜன் - சசிகலா என்கிற சுஜிதா தம்பதியினருக்கு 4 லட்சம் ரூபாய்க்கு கைம்மாற்றப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால் விஜய்யின் மூன்றாவது பெண் குழந்தையை விலைக்கு வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் சேலம் கரியபெருமாள் கரட்டைச் சேர்ந்த வெங்கடேஷின் மனைவி கோமதி என்கிற அமுதா (34), ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த நிஷா (40), ஆகிய இருவரையும் டிச.11- ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், குழந்தை விற்பனை வழக்கில் தலைமறைவாக மரியகீதா (43), ராஜேஸ்வரி (57) மற்றும் பொம்மிடியைச் சேர்ந்த சுந்தரராஜன் (40) ஆகியோரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் திங்களன்று (டிச. 28) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பிறந்து 58 நாள்களே ஆன சத்யாவின் பெண் குழந்தையை மீட்டனர். தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யாவின் கணவர் விஜய், சித்ரா என்கிற சித்ரபிரியா, அவருடைய கணவர் கார்த்தி ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, குழந்தையின் பிறப்பு மற்றும் உறவினர்கள் குறித்தும் அறிவியல் ரீதியிலான விசாரணை மேற்கொண்டு, குழந்தையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.