‘மத்திய சிறை ஒன்றில் பணிபுரியும் உதவி சிறை அலுவலர், ஊடகங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு, சிறையில் நடைபெறும் சிறை நிர்வாகம் தொடர்பான நிகழ்வுகளை உடனுக்குடன் ஊடகங்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.’
-கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் சிறைத்துறை தலைவர் அலுவலகத்திலிருந்து, தமிழகத்திலுள்ள அனைத்துச் சிறைகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளில் இதுவும் ஒன்று.
ஊடகங்களுடனான தொடர்பினைக் குறிப்பிட்டதாலோ என்னவோ, ரகசிய விசாரணை குறித்த இந்தச் சுற்றறிக்கை, அதிவேகமாக அனைத்து ஊடகங்களுக்கும் தவறாமல் போய்ச் சேர்ந்துவிட்டது.
சிறை என்பது வெளியில் குற்றம் செய்யும் குற்றவாளிகள், தங்கள் தவறை உணர்ந்து மனம் திருந்தி நல்வாழ்வு பெறுவதற்கான ஒரு இடமென்றும், சிறைகளில் கடமை உணர்வுடன் இருக்க வேண்டிய சிறை அலுவலர்கள்/பணியாளர்கள், ஒரு எடுத்துக்காட்டாகத் திகழாமல், முறைகேடுகளில் ஈடுபடுவதால், சிறைவாசிகள் திருந்துவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு, மேலும் குற்றச் செயல்களிலில் ஈடுபடத் தூண்டுகோலாக அமைந்துவிடும் என்றும், அதனால், சிறைவாசிகளுக்கு சிறை நிர்வாகம் மீது அவமரியாதை மற்றும் அலட்சியப்போக்கு ஏற்படுவதுடன், சிறை நிர்வாகம் சீர்குலையும் ஆபத்தையும் உருவாக்குகிறது எனவும் அறிவுறுத்தியுள்ள அந்தச் சுற்றறிக்கையில் காணப்படும் முறைகேடுகளில் சில –
மத்திய சிறை ஒன்றில் பணிபுரியும் ஆண் செவிலி உதவியாளர், பணம் பெற்றுக்கொண்டு வெளிமருந்துகள் எடுத்துக்கொள்ள சிறைவாசிகளை அனுமதிக்கிறார். சிறை மருத்துவமனையில் உள்ள மருந்துகளை, அச்சிறை மருத்துவரின் தனியார் மருத்துவமனைக்குக் கடத்துகிறார்.
மாவட்டச்சிறை கண்காணிப்பாளர் ஒருவர், தனது குடும்பத்திற்கான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிவர சிறைவாசிகளின் உறவினர்களை வற்புறுத்துகிறார். மின் கட்டணம் போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட, சிறைவாசிகளின் உறவினர்கள் மூலமாகவே நிறைவேற்றிக் கொள்கிறார்.
ஒரு சிறையில் முதல்நிலைக் காவலர், ஜாதிப் பற்றுடன் செயல்படுகிறார். ஜாதி அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறார். மற்றொரு சிறையில்,இரண்டாம் நிலைக் காவலர் ஒருவர், விதிகளை மீறி சிறைவாசிகள் பலருடைய மனைவிகளிடம் தகாத உறவு வைத்திருக்கிறார்.
பல சிறைகளில், அலுவலர்களும் பணியாளர்களும், சிறைவாசிகளிடமிருந்து பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்று, விருப்பம்போல் கைபேசிகள் பயன்படுத்துவதற்கும், போதைப் பொருட்கள் உட்கொள்வதற்கும், விரும்பிய வெளி உணவுகள் சாப்பிடுவதற்கும் அனுமதிக்கின்றனர். சிறைக் காவலர்களில் சிலர், பிரபல ரவுடிகள், மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்ட குழுத்தலைவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். அத்தகையோர், சிறைகளில் வேண்டிய வசதிகள் அனுபவிக்க அனுமதிக்கின்றனர்.
இன்னும் சில முறைகேடுகளையும் பட்டியலிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார்களுக்கு இடமளிக்காமல் சிறை நிர்வாகம் செயல்படவும் அறிவுறுத்துகிறது அச்சுற்றறிக்கை.
தமிழகத்தில் சிறை நிர்வாகம் சீர்குலைந்துவிடக் கூடாது என்ற கடமை உணர்வு வர வேண்டியவர்களுக்கு வந்தால் சரிதான்!