திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் நம்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், அஞ்சுகம் கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம், கமலாநேரு, அண்ணா, காந்திஜி, ம.பொ.சிலம்புசெல்வர் நெசவாளர் கூட்டுறவு சங்கம், சித்தயன்கோட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமரர் சஞ்சய் காந்தி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உட்பட 8 கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன.
சின்னாளபட்டியில் உள்ள நான்காயிரம் கைத்தறி நெசவாளர்களில் சுமார் 1,500 நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளனர். மீதமுள்ள 2,500 நெசவாளர்கள் தனியாரிடம் பட்டுநூல் வாங்கி நெசவு நெய்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 25- ஆம் தேதி கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இன்று வரை நெசவு நெய்ய முடியாமல் வறுமையில் வாடி வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் மேலாளர்கள் தங்களிடம் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்காததால் அவர்களும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்நிலையில் சின்னாளபட்டி அருகே உள்ள ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள நெசவாளர்கள் மற்றும் கமலாநேரு நெசவாளர் காலனி, ஜெ.ஜெ.காலனி, அஞ்சுகம் காலனி, ராஜகாளியம்மன் நகர், சித்தன்நகர், உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் நெசவாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுக்கோட்டை நெசவாளர் காலனியில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் அருகே கடந்த இரண்டு நாட்களாக கஞ்சித் தொட்டி திறந்து நெசவாளர்களிடம் பணம் வசூல் செய்து மொத்தமாக கஞ்சி காய்ச்சி நெசவாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இது குறித்து ஜெ.புதுக்கோட்டை நெசவாளர் காலனியைச் சேர்ந்த சௌடேஸ்வரி நெசவாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செண்பகராமன் கூறுகையில், "கூட்டுறவு சங்கங்கள் நெசவாளர்கள் மீது அக்கறை இல்லாததால் முறையாக நூல் மற்றும் பாவுகளை வாங்கி நெசவாளர்களுக்குக் கொடுப்பதில்லை. இதனால் கைத்தறி நெசவாளர்கள் தனியார் சேலை உற்பத்தியாளர்களிடம் அடிமைபோல் உள்ளனர். முறையாக நெசவாளர்களுக்கு சேலை நெய்ததற்கு கூலிகளை வழங்க கூட்டுறவு சங்கங்கள் மறுப்பதால் நெசவாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்" என்றார்.
நெசவாளர் செல்வராஜ் கூறுகையில், "நான் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். எங்கள் சங்கத்தில் மேலாளர் சேலை நெய்வதற்கு ரூ.200 கூலி குறைவாகக் கொடுப்பேன் என்கிறார். நாங்கள் முடியாது என்று கூறியதால், எங்களுக்கு நெசவு நெய்ய நூல்கள் மற்றும் பாவுகளை வழங்குவதில்லை. ஏற்கனவே 20 சேலை வரை நெய்து கொடுத்துள்ளோம், அதற்கும் கூலி குறைவாக கொடுப்பேன் என்கிறார். கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் ஆனந்தனிடம் புகார் செய்தோம். அவர் ஏற்கனவே நெய்த சேலைகளுக்கு கூலி குறைத்துக் கொடுக்க கூடாது எனக் கூறியும் கூலி தர மறுத்து வருகிறார் என்றார். முறையாக எங்களுக்குச் சேலை நெய்ய நூல் வழங்காததால் நாங்கள் வறுமையில் வாடுகிறோம். மருத்துவமனைக்குச் செல்லக்கூட பணம் இல்லாமல் தவித்து வருகிறோம்" என்றார்.
இதேபோல் நெசவாளர் காலனியைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், "கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் முறையாக நூல்கள் மற்றும் பாவுகளை வழங்காததால் இன்று வறுமையில் வாடி வருகின்றனர். கஞ்சித்தொட்டி திறக்கும் அளவிற்கு நெசவாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்" என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர், கைத்தறி நெசவாளர்கள் நலனில் அக்கறை கொண்டு முறையாக பாவு மற்றும் நூல்களை வழங்க கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டுமென்று சின்னாளபட்டி வட்டார கைத்தறி நெசவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.