தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்றதும் துள்ளிக் குதித்த மாணவர்கள் மெரினாவில் கூடியது, அரசாங்கத்தையே ஆட்டிப்பார்த்தது. துணைக்கு பெற்றோர்களும், குழந்தைகளும் போராட்டங்களில் கலந்து கொண்டனர். தலைநகர் சென்னையில் போராட்டம் தொடங்கியதும் தமிழகத்தின் அத்தனை கிராமங்களிலும் போராட்டம் வெடித்தது.
இந்த தன்னெழுச்சி போராட்டத்தைப் பார்த்து, தமிழர்கள் வாழும் நாடுகளிலும் போராட்டங்களை நடத்தினார்கள். இப்படித்தான் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கத்தை சுற்றியுள்ள பல கிராம இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பின் சார்பிலும் போராட்டங்கள் நடந்தது. தமிழர்களின் போராட்டத்தின் வெற்றியாக ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியபோது மக்கள் மகிழ்ந்தனர். பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்கள்.
கீரமங்கலத்தில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக மெய்நின்றநாதர் ஆலையம் முன்னால் உள்ள தலைமைப் புலவர் நக்கீரர் சிலைக்கு மாலை அணிவித்த இளைஞர்கள், பேருந்து நிலையத்தில் அத்தி மரக்கன்றை நட்டனர்.
கஜா புயலில் பேருந்து நிலையத்தை சுற்றி நின்ற அத்தனை மரங்களும் சாய்ந்தாலும் அன்று நடப்பட்ட அந்த அத்தி மரக்கன்று மட்டும் நின்றது. இந்த நிலையில் தற்போது அந்த அத்தி மரம் காய்க்கத் தொடங்கியுள்ளது.
இதைப் பார்த்த ஜல்லிக்கட்டு போராட்ட இளைஞர்கள் வாக்குறுதி கொடுக்கும் அரசியல்வாதிகள் ஏதும் செய்யவில்லை என்றாலும், நம்மால் நடப்படும் மரங்கள் பலன் கொடுக்கும். அப்படித்தான் இந்த அத்திமரமும் காய்க்கத் தொடங்கியுள்ளது. அதேபோல தேர்தலின்போது வாக்களித்த பிறகு மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். நாங்கள் வாக்களித்த வேட்பாளர் வெற்றி பெற்று மக்களுக்கு ஏதும் செய்யவில்லை என்றாலும் நாங்கள் வைத்த மரக்கன்று நிச்சயம் பலன் கொடுக்கும். அதற்கு இந்த அத்திமரம் சான்றாகும் என்றனர்.