ஆளுங்கட்சியான திமுகவில் உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு கட்சிப் பொறுப்பாளர்களையும் அறிவாலயம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சியை ஆளுங்கட்சியான திமுக கைப்பற்றியது. மாநகரில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளை திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியது. கட்சிப் பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் மாநகர உள்ளாட்சித் தேர்தலின்போது அமைச்சர் ஐ.பெரியசாமியும், கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாரும் பம்பரமாக செயல்பட வைத்து வெற்றி பெற வைத்தனர். அதனடிப்படையில் தான் கட்சிக்காக உழைத்த இளமதியை மேயராகவும், துணை மேயராக நகரச் செயலாளர் ராஜப்பாவையும் நியமித்தனர். அதைத் தொடர்ந்து தான் மாநகரில் உள்ள 48 வார்டுகளில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என 12 வார்டுகளுக்கு ஒரு பகுதி கழக செயலாளர் என நான்கு மாநகர பகுதி கழக செயலாளர்களை நியமிக்க தலைமை அறிவித்து இருந்தது.
அதன்டிப்படையில் தான் 30 வருடங்களுக்கு மேலாக அரசு போக்குவரத்து தொழிற்சங்கத்தில் அமைப்புச் செயலாளராகவும், தலைவராகவும் இருந்து கட்சிக்காக இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு தொழிற்சங்கத்திற்கு அதிக உறுப்பினர்களையும் சேர்த்து சங்கத்தையும் வளர்ந்து கொண்டு அமைச்சர் ஐ.பி.யிடமும், ஐ.பி.எஸ்.யிடமும் விசுவாசமாக இருந்து கட்சிக்காரர்களையும் அனுசரித்து கொண்டு கட்சியையும் வளர்ந்து வந்த ராஜேந்திரகுமாரை கிழக்கு பகுதி கழக செயலாளராக நியமித்து இருக்கிறார்.
அதுபோல் கட்சிக்காக உழைத்து வார்டு மக்களிடமும், தொண்டர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான 12வது வார்டு கவுன்சிலரான ஜானகிராமனை வடக்கு கழக பகுதி செயலாளராக நியமித்து உள்ளனர். அதுபோல் கடந்த சில வருடங்களாகவே கட்சியில் தீவிர விசுவாசியான மாறி தனது அப்பா போலவே கட்சிக்காக உழைத்து தொண்டர்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வரும் முன்னாள் நகர்மன்றத் தலைவர் பஷீர் அகமது மகனான பஜீலு ஹக்கை மேற்கு கழக பகுதி செயலாளராக நியமித்துள்ளனர். அதேபோல் கட்சிக்காக உழைத்துக் கொண்டு சமூக மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்து வரும் சந்திரசேகரை தெற்கு கழக பகுதி செயலாளராக நியமித்துள்ளனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியும்,கிழக்கு மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவும்மான ஐ.பி.செந்தில்குமாரும் பரிந்துரை செய்ததின் பேரில் அறிவாலயமும் அதிகாரப்பூர்வமாக நான்கு பகுதி செயலாளர்களையும் அறிவித்திருக்கிறது. அதை கண்டு கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கிறார்கள்.