திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் சித்தரேவு ஊராட்சியில் 7வது வார்டு உறுப்பினராக கண்ணன் இருந்து வருகிறார்.
வார்டு உறுப்பினராக கண்ணன் வெற்றி பெற்றும்கூட தனது வார்டு மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுக்க முடியாமலும் எந்த ஒரு பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. வேலை செய்வதற்காக ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலரிடம் முறையிட்டால் எங்களுக்கு இன்னும் நிதி வரவில்லை என்று கூறுவதாக சொல்லப்படுகிறது. இதுனால வாக்களித்த மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளான கழிவுநீர், குடிநீர், ரோடு மற்றும் தெருவிளக்கு ஆகிய மக்களின் அன்டாற தேவைகளை செய்துதரத காரணத்தினால் மனம் நொந்து போன சித்தரேவு 7வது வார்டு உறுப்பினர் கண்ணன் திருவோடு ஏந்தி மக்களிடத்தில் எங்களது ஊராட்சி அலுவலகத்தில் நிதி இல்லை அதனால் நமது வேலையை நாம் தான் செய்து கொள்ள வேண்டும் அதற்கு எனக்கு பிச்சை போடுங்கள் என்று கூறி பொதுமக்களிடம், வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தார் அதை கண்டு பொது மக்களே அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இதுபற்றி வார்டு உறுப்பினர் கண்ணனிடம் கேட்ட போது, “எனது வார்டில் உள்ள கோட்டை பெட்டியில் கழிவுநீர் முறையாகச் செல்ல வாய்க்கால் வசதி இல்லை. இதனால் நடைபாதையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர் மேலும் எனது வார்டில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல்வேறு இடங்களில் ஆழ்துளை குழாய் கிணறுகள் சரி செய்யப்படாமல் உள்ளன. எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவரிடம் கூறினேன். அதற்கு தலைவர் இப்போது ஊராட்சியில் நிதி இல்லை என்று கூறினார்கள். எனக்கு ஓட்டு போட்ட மக்களுக்காக நெத்தியிலும் வயிற்றிலும் நாமம் போட்டு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக திருவோடு ஏந்தி பிச்சை யெடுத்து திட்டப்பணிகளை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை பற்றி சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மலரிடம் கேட்டபோது, “மாநில நிதிக்குழு மானிய நிதி கடந்த ஏழு மாதங்களாக வராத காரணத்தால் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை சரிவர செய்யமுடியவில்லை. மேலும் ஊராட்சியில் உள்ள பணியாளர்களுக்கு சம்பளம் போடுவதற்கு சிரமப்பட வேண்டியுள்ளது. மாநில நிதிக்குழு மானியம் வந்தவுடன் ஊராட்சி மன்ற உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.
இது சம்பந்தமாக மாவட்ட ஊராட்சி அதிகாரிகள் சிலரிடம் கேட்ட போது, “அந்த சித்தரேவு ஊராட்சியில் ஐந்துலட்ச ரூபாய் பொது நிதியாக தற்போது இருக்கிறது. அதை வைத்து கூட வளர்ச்சி பணிகளை பார்க்கலாம். அதோடு தற்போது அரசும் மாவட்டத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சிகளுக்கு தலா 2 லட்சம் வீதம் வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. அதையும் அந்தந்த ஊராட்சிகளுக்கு உடனே அனுப்பிவிட்டோம் அப்படி இருக்கும்போது தலைவருக்கும் வார்டு உறுப்பினருக்கும் உள்ள லோக்கல் பாலிடிக்ஸ் வைத்துக்கொண்டு இப்படி ஒரு நூதன போராட்டத்தை நடத்தி அரசுக்கு கெட்ட பெயரை தான் ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று கூறினார்கள்.