கோப்புப் படம்
கோவையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மழை காரணமாக இரவு சுமார் 9 மணியளவில் செட்டிவீதி கே.சி தோட்டம் பகுதியில் உள்ள பழமையான ஒரு மாடிக்கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பெரியகடைவீதி காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளுக்கு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தினர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்படும் நபர்களுக்கு, சிகிச்சையளிக்க மருத்துவக் குழுவினருடன் ஆம்புலன்ஸ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது.
5 -க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில், 2 பெண்களை காயங்களுடன் மீட்ட தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை ஒன்றை சிறு சிராய்ப்புகளுடன் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட பெண்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து கோவையிலுள்ள பயன்படுத்தப்படாத பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.