அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனின் 58-வது பிறந்தநாளை அக்கட்சி தொண்டர்கள் விமர்சையாகக் கொண்டாடினார்கள். தனது பிறந்தநாளின் போது பேனர்கள், கட் அவுட்டுகள் எதுவும் வைக்கக் கூடாது என்றும், மக்களுக்கு நல உதவிகள் வழங்க வேண்டும் என்றும் சமீபத்தில் கேட்டுக்கொண்டார் தினகரன். அந்த வகையில், ஏழைகளுக்கு உணவு வழங்கியும், பள்ளிக் குழந்தைகளுக்கு நோட் புத்தகங்கள் வழங்கியும் கொண்டாடினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா, சசிகலா, தினகரன் பிறந்தநாளின் போது, சென்ன ராமாபுரம் எம்.ஜி.ஆர். இல்ல வளாகத்தில் அமைந்திருக்கும் காதுகேளாத - வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் வழங்கி கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் தென்சென்னை மாவட்ட அதிமுகவின் முன்னாள் செயலாளர் என்.வைத்தியநாதன்.
அந்த வகையில் இன்று தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு எம்.ஜி.ஆர். காதுகேளாத பள்ளிக் குழந்தைகளுக்கு சைவ, அசைவ உணவுகள் வழங்கி தினகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை எம்.ஜி.ஆரின் குடும்ப வாரிசுகளில் ஒருவரான குமார் ராஜேந்திரன், என்.வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர். பிறந்தநாள் நிகழ்ச்சியை நடிகை சி.ஆர்.சரஸ்வதி கேக் வெட்டி துவக்கி வைத்து 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்தினை பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தினகரன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்.