Skip to main content

கஜா புயல் பாதிப்பினால் குரூப்-2 முதன்மை தேர்வை முன்கூட்டியே நடத்தக்கூடாது! அன்புமணி ராமதாஸ்

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
ar

 

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:

’’தமிழ்நாடு முழுவதும் 2019-ஆம் ஆண்டு மே மாத மத்தியில் நடைபெறுவதாக இருந்த குரூப்-2 முதன்மைத் தேர்வுகளை மூன்று மாதங்கள் முன்பாக, வரும் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத காவிரி டெல்டா மாணவர்களிடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழக அரசுத் துறைகளில் உள்ள சார் பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட குரூப்- 2 பணிகளில் காலியாக உள்ள 1199 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இதற்கான முதல்நிலைத் தேர்வுகள் நவம்பர் மாதம் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும், அதைத் தொடர்ந்து மே மாதம் முதன்மைத் தேர்வுகள் நடத்தப் படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பிப்ரவரி மாதம் வெளியிடப்பட வேண்டிய முடிவுகளை இரு மாதங்கள் முன்பாக கடந்த 17-ஆம் தேதியே வெளியிட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதால், முதன்மைத் தேர்வுகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட மூன்று மாதங்கள் முன்பாக வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

 

வழக்கமாக முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு 3 மாதங்கள் ஆகும் நிலையில், இம்முறை ஒரு மாதம் ஒரு வாரத்தில் வெளியிடப்பட்டது உண்மையாகவே பாராட்டத்தக்க செயல் தான்.  தேர்வு முடிவு முன்கூட்டியே வெளியிடப்பட்டதால் முதன்மைத் தேர்வுகளை முன்னதாகவே நடத்துவதையும்  குறை கூற முடியாது. இன்னும் கேட்டால் குரூப்&2 முதன்மைத் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டால், அத்தேர்வுகளை முடித்து விட்டு, அடுத்தக்கட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், இவை அனைத்துமே இயல்பான சூழலுக்கு மட்டும் தான் பொருந்தும். தமிழகத்தில் இப்போது இயல்பான நிலைமை நிலவவில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

 

தமிழ்நாட்டில் காவிரி பாசன மாவட்டங்களை கடந்த நவம்பர் 16&ஆம் தேதி தாக்கிய கஜா புயல் அப்பகுதிகளை சிதைத்து விட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கின்றனர். அத்துடன் போட்டித்தேர்வுகளுக்கு படிப்பதற்காக மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நாசமாகிவிட்டன. அதுமட்டுமின்றி, புயல் தாக்கி ஒன்றரை மாதங்களாகியும் இப்போது வரை பல கிராமங்களில் மின் இணைப்புகள் வழங்கப்படாததால்  அவர்களால் உடனடியாக போட்டித்தேர்வுக்கு தயாராக முடியாது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இதே நிலைமை தான் காணப்படுகிறது.

 

கஜா புயல் தாக்கியதற்கு 5 நாட்கள் முன்பாகத்தான் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. அத்தேர்வில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெற்றனர். கஜா புயல் பாதிப்பிலிருந்து மீண்டு, தேர்வுக்குத் தயாராக அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டால் நிச்சயமாக முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுவார்கள். அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் முறையாக தேர்வுக்குத் தயாராகி, அதில்  பங்கேற்று வெற்றி பெறுவது முக்கியமா? அல்லது தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது முக்கியமா? என்று கேட்டால் அனைவருக்கும் சமவாய்ப்புத் தத்துவத்தின்படி முதல் வாய்ப்புக்குத் தான் மதிப்பளிக்க வேண்டும்.

 

குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை பிப்ரவரி மாதத்திற்கு பதிலாக மே மாதத்தில் நடத்துவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது; ஆனால், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு  நன்மை கிடைக்கும். எனவே, கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி,  குரூப் 2 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளை முன்கூட்டியே பிப்ரவரி மாதத்தில் நடத்தாமல் ஏற்கனவே அறிவித்திருந்தவாறு மே மாதத்தில் நடத்த பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.’’

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

சென்னை கண்ணகி நகர், சுனாமி நகர் குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்ய முயன்ற போது போலீசாரை கற்களால் தாக்கிய சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்முடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின் மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடம் இருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

Tamil Nadu on the verge of degradation- Anbumani Ramadoss condemned

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான் காணப்படுகிறது. மது போதையை கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.