கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த போலி நீதிபதி சந்திரன் தர்மபுரியில் கைது மேட்டுப்பாளையத்தில் உள்ள சந்திரன் வீட்டில் போலி முத்திரைகள் , கட்டுக்கட்டாக போலி ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஏ.ஆர். சந்திரன். சந்திரன் இவர் சமரச தீர்வு மையம் என்ற போலியான அமைப்பை நிறுவி தான் ஒரு நீதிபதி என்று கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சில வழக்கறிஞர்களின் உதவியுடன் மோசடியில் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாகக் கூறி போலி ஆவணங்கள் தயாரித்து பல்வேறு நபர்களிடம் பல லட்சங்களை ஏமாற்றி மோசடி செய்து வந்துள்ளார்.
இதேபோல் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெகநாதன் என்பவருடைய நிலத்தை தர்மபுரியில் போலியான ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகனாதன் வழக்கு தொடுத்துள்ளார். இது குறித்து விசாரணை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்திரனையும் அவருடைய போலி பாதுகாவலரையும் கரூர் அருகே கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து போலி நீதிபதி சந்திரனை மேட்டுப்பாளையம் அழைத்து வந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர், இதில் 50 க்கும் மேற்பட்ட போலி முத்திரைகளையும் கட்டுக்கட்டாக ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர். 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மோசடி நபரான சந்திரன் தன்னை ஒரு நீதிபதி என்று கூறிக் கொண்டும் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலரையும் அமர்த்திக் கொண்டு பல ஆண்டுகளாக வலம் வந்ததுடன் பலரையும் ஏமாற்றிய பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகள், மற்றும் சொத்துக்களையும் வாங்கிக் குவித்துள்ளார். z
இவரை உண்மையான நீதிபதி என்று நம்பிய அண்டை வீட்டார்கள் மிகுந்த மரியாதை கொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.