2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியோடு கூட்டு வைத்ததை எதிர்த்து தேமுதிக திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டுமென கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் அப்போது தேமுதிக எம்எல்ஏக்கள் ஆக இருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஈரோடு எம்எல்ஏ சந்திரகுமார், சேலம் பார்த்திபன், திருவள்ளூர் சேகர் ஆகியோர். இவர்கள் தலைமையில் 10 மாவட்ட செயலாளர்கள் என தே.மு.தி.க. சந்திரகுமார் அணி என தனி அணி உருவானது. அதன் பிறகு மூன்று எம்எல்ஏக்களும் தனி அணியாக திமுகவுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டனர். தேர்தலில் தோல்வி ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் மூவரும் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
திமுகவுக்கு சென்ற அவர்களுக்கு கட்சி பொறுப்புகளும் வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இந்த மூவர் உட்பட நிர்வாகிகளை அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளராகவும் கேப்டன் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் "இந்த சந்திரகுமார், பார்த்திபன், சேகர் இவர்கள் ஒரு செல்லாக்காசாக இருக்கப் போகிறார்கள்.
இவர்களுக்கு இனிமேல் அரசியல் எதிர்காலமே இல்லை" என்று தேமுதிக மேடையில் பேசி வந்தார். இந்த நிலையில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவில் இருந்து வந்த பார்த்திபனுக்கு சேலம் தொகுதி வேட்பாளராக திமுக நிறுத்தியது. அந்த சேலம் தொகுதியின் பொருப்பாளராக அதே தேமுதிகவில் இருந்து வந்த ஈரோடு சந்திரகுமாரை தேர்தல் பணி பொறுப்பாளராக தி.மு.க. தலைமை நியமித்தது.
இதை ஒரு சவாலாக எடுத்து சந்திரகுமார் இந்த தொகுதியை எப்படியும் வெற்றி பெற்று தீருவது என்று கடுமையாக தொண்டர்களோடு உழைத்தார்கள். தங்களை செல்லாக்காசு அரசியல் அனாதை என்றெல்லாம் பேசிய பிரேமலதா விஜயகாந்த்திற்கு இந்த தொகுதி வெற்றி மூலம் பாடம் புகட்டுவோம் என்று உறுதி எடுத்து செயல்பட்டார்கள். அதன் வெளிப்பாடாக திமுக சேலத்தில் ஒரு லட்சத்து 47 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. பார்த்திபன் திமுக எம்பி ஆக உருவாகி உள்ளார். இதைப்பற்றி சந்திரகுமார் நம்மிடம் கூறும்போது, "தமிழகத்தில் அரசியல் எதிர்காலம் என்பது தளபதி மூலம்தான் நடக்க முடியும். தேமுதிகவில் இருந்து வந்த எங்களை அனாதைகள் என்றும் செல்லாக்காசு என்றும் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தான் இப்போது அரசியல் அனாதையாக இருக்கிறார்" என்றார்.