கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் பணியாற்றி வந்த விஜயகுமார், நேற்று அதிகாலை தனது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தேனியில் அவரது வீடு அமைந்துள்ள ரத்தினம் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று மாலை 5 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடைக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க காவல்துறை அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் டிஜிபி, ஏடிஜிபிக்கள், ஐஜிக்கள் என ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. மேலும் டிஐஜி தற்கொலை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து பேசுகையில், “ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். காவலர் நலவாழ்வு திட்டத்தை துவக்கி 1.5 லட்சம் காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு மன அழுத்தத்தை போக்குவதற்காக அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது.
கோவையில் டிஐஜி விஜயகுமார் நேர்மையான, திறமையான அதிகாரி என அறியப்பட்டவர். இவருக்கு 6 மாத காலமாக மன அழுத்தம் இருந்ததாகவும், இதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மன அழுத்தத்தில் இருப்பவரிடம் பணிகளைக் கொடுத்து மேலும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கிய காரணத்தால்தான் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையிலேயே இது வேதனைக்குரிய விசயம். டிஐஜி விஜயகுமார் மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்று அரசு முழுமையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். சிபிஐ விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.