ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த அயிலம் பகுதியைச் சேர்ந்தவர் சாது, ஜாய் மெசி தம்பதியினர். இவர்களது மகள் பள்ளி சிறுமி. இவருக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்.. சிறுமியின் பெற்றோர் சிறுமிக்கு சிகிச்சையளிக்க அருகாமையில் உள்ள அருங்குன்றம் பகுதியில் செயல்பட்டு ஆரம்பச் சுகாதார நிலையம் சென்றுள்ளனர்.
அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் மற்றும் செவிலியர் மருத்துவமனையில் இல்லாத காரணத்தால், பணியில் இருந்த காவலாளியே சிறுமிக்கு மருந்து வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பணியில் இருந்த காவலாளியிடம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லையா? எனக் கேள்வி எழுப்பியதற்கு, ''அதான் மருந்து கொடுத்துட்டேனே.. ஏன் இதை பெருசு பண்றீங்க..'' எனக் காவலாளி பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், வாக்குவாதம் ஏற்பட காவலாளி தன் செல்போனில் செவிலியர் ஒருவருக்கு போன் செய்து சிகிச்சைக்காக வந்த சிறுமியின் உறவினரிடம் கொடுத்துள்ளார். அப்போது, செவிலியரிடம் பேசிய சிறுமியின் தரப்பினர், அரசு மருத்துவமனையில் யாரும் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ''டியூட்டியில் இருந்தவங்க இப்பதான் சார் மாறினார்கள்.. நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவேன்..''என்று செவிலியர் பதில் அளித்துள்ளார். ஆனால், சுமார் 1 மணி நேரம் காத்திருந்தும், யாரும் வராததால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக சிறுமியை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு, சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்ற சிறுமிக்கு பணியில் இருந்த இரவு காவலாளி மருந்து வழங்கிய சம்பவம் தொடர்பான செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அருங்குன்றம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவரும், செவிலியரும் பணியில் இல்லாத காரணத்தால் மருத்துவமனை காவலாளியே சிறுமிக்கு மருந்து வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.