Skip to main content

'பல்வேறு துறைகள் இணைந்து செயல்பட வேண்டும்' - முதல்வர் அறிவுரை

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

'Different departments should work together' -  m.k.stalin advises

 

'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்திற்காக அண்மையில் பல மாவட்டங்களுக்கு முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு அரசுத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனையிலும் ஈடுபட்டு வந்தார். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த நிலையில் மீண்டும் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என திட்டத்தில் மாவட்டங்களில் முதல்வர் ஆய்வு செய்ய இருக்கிறார்.

 

நேற்று சாலை மார்க்கமாக முதல்வர் விழுப்புரம் சென்றிருந்த நிலையில் இன்று விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சார்பில்  நடைபெறும் திட்டப் பணிகள் குறித்த கள ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும். இது விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் தொடங்குதல் ஆகியவற்றை துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன். விவசாயிகளின் வாழ்வு மேம்பட இது முக்கியமானது. குழந்தை ஊட்டச்சத்தின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைவது கண்காணிக்கப்பட வேண்டும். மக்களுடைய தேவையை பூர்த்தி செய்வது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கத்தில் பல்லாயிரம் கோடிகள் ஒவ்வொரு திட்டத்திற்கும் செலவு செய்யப்படுகிறது. எனவே இரண்டு வகையிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டாக வேண்டும்.

 

அலுவலர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திப்பது என்பது மிக மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும் யாரும் தனியாக செயல்பட முடியாது. ஒன்றோடு ஒன்று இணைந்தவைதான் அரசு துறைகள். எனவே பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது திட்டங்களின் சீரான செயலாக்கத்திற்கு ஏதுவாக விளங்கும். அதேபோல் ஒவ்வொரு துறை செயலாளர்களும் தங்கள் துறையில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் எத்தகைய பணிகள் நடைபெற்று வருகிறது  என்பதை அறிய கூட்டு கூட்டங்கள் அவசியமாகிறது.

 

 

சார்ந்த செய்திகள்