சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். கோவில் கருவறையில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாட அனுமதிக்கவில்லை என பல்வேறு குற்றச்சாட்டுக்களைக் கூறி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பல்வேறு அமைப்புகள் பல கட்ட போராட்டங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் நடத்தியது. இதுகுறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவேண்டும் என்று உத்திரவிட்டதன் பேரில் அப்போதைய முதல்வர் கலைஞர் ஆட்சியில் நடராஜர் கோயிலை 2008-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் நிர்வகித்து வந்தது.
இதனைத் தொடர்ந்து கோயிலில் ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டிய நிலையில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டி வருவதால் கோயில் வரவு செலவு கணக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி அறநிலையத்துறை ஆணையர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், எஸ். சவுந்தர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில், கோயிலின் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு தொடர்பான விவரங்கள் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் கோயிலுக்குச் சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை வட்டாட்சியர் நிர்வகித்து வருகிறார். அந்த நிலத்திலிருந்து வாடகை வருவாயாக வெறும் ரூ.93ஆயிரம் மட்டுமே பெறப்படுகிறது.
நடராஜர் கோயிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் சுமார் 3000 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கிய நிலையில் தற்போது 1000 ஏக்கர் மட்டுமே உள்ளது. எனவே, அதுகுறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் வழங்கும் தட்சணைகளை தீட்சிதர்கள் எடுத்துச்சென்ற போதிலும் கோயில் நிர்வாகத்துக்குத் தேவைப்படும் பட்சத்தில் பங்களிப்பு தொகையை வழங்கப்படுகிறது. காணிக்கைக்கான வரவு, செலவு கணக்கைப் பராமரிக்கத் தனி திட்டம் வகுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு 3 ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்த நிலையில் அதில் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தீட்சிதர்கள் அவர்கள் இஷ்டப்படி தனி நபர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதனைக் கேட்ட நீதிபதிகள் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியளிப்பதாகவும் கடந்த 2017-18 முதல் 2021-22 வரையிலான வரவு செலவு கணக்கு புத்தகங்களை தாக்கல் செய்ய தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர். மேலும் பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகள், செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறையை உருவாக்கி, அதன் வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தீட்சிதர்கள் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோயிலுக்கு சொந்தமாக தற்போது எவ்வளவு ஏக்கர் நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். அத்துடன் கோயிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களைத் தீட்சிதர்கள் தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பான விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக அக் 3 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்திரவிட்டனர். இந்த உத்தரவு கோவில் தீட்சிதர்கள், தமிழக மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள உள்ள சிவ பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து கோவில் தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேசன் தீட்சிதர், கோவில் வழக்குரைஞர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கர் விற்கப்பட்டது என்று எந்தவித ஆதாரமும் இல்லாத அபாண்டமான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இதனை தாங்கள் மறுக்கிறோம். தீட்சிதர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகிறது. பதிவுத்துறை சட்டத்தின் படி கோவில் நிலத்தை யாருக்கும் விற்க முடியாது. அப்படி உள்ள போது தீட்சிதர்கள் எப்படி அரசுக்குத் தெரியாமல் 2 ஏக்கர் ஏக்கர் நிலத்தைத் தனி நபர்களுக்கு விற்பனை செய்து இருப்பார்கள். இதற்கு வாய்ப்பே இல்லை. இதுபோன்று தீட்சிதர்களின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் செயல்களை இந்து சமய அறநிலை துறை செய்கிறது” என்றனர். சிதம்பரம் கோயில் பிரச்சனை சிதம்பரம் ரகசியமாகவே உள்ளது.