அழகிய தமிழ் மொழியை அமுக்க பார்க்கிறதாம் பாஜக. யார் எழுதிக்கொடுத்தது? திகார் ஜெயிலில் மகனை விட்டுவிட்டு சிதம்பரம் எழுதிக்கொடுத்தாரா? என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ராகுல் காந்திக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அழகிய தமிழ் மொழியை அழிக்க பாஜக முயற்சிக்கிறது என டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்,
அழகிய தமிழ் மொழியை அமுக்க பார்க்கிறதாம் பாஜக. யார் எழுதிக்கொடுத்தது? திகார் ஜெயிலில் மகனை விட்டுவிட்டு சிதம்பரம் எழுதிக்கொடுத்தாரா?
இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது, எங்கே உங்களுக்கு அறிவு போனது? இந்த அழகிய தமிழ் மொழியை பேசிய அத்தனை தமிழர்களும் கொன்று குவிக்கப்பட்டனர். உங்கள் ஆட்சி தான் நடந்தது. உங்கள் துணையோடு தான் அது நடந்தது. அங்கு மட்டுமல்ல ஆரம்பகால சரித்திரத்தை பார்த்தால் இங்கே மொழிப்போர் தியாகிகளை, இந்தியை எதிர்த்து போராடியவர்களை கொன்று குவித்தது யார்? காங்கிரஸ் ஆட்சி தான் அப்போது இருந்தது.
இது நானூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அல்ல. நேற்று எங்கள் கண்முன்னால் நீங்கள் நடத்திய கொடூரம். அதை இன்றே மறந்துவிடுவோம் என்று எப்படி நம்புகிறீர்கள்? தமிழுக்கும், தமிழர்களுக்கும் பச்சை துரோகம் செய்துவிட்டு தமிழையும், தமிழர்களையும் காக்க வந்தவர்கள் போல் பகல் வேஷம் போடவேண்டாம்.
இந்த நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி காங்கிரஸ். ஆனால் இப்போதுதான் தமிழ் அழகான மொழியாக கண்ணுக்கு தெரிந்து இருக்கிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்தியாவிலேயே மூத்த மொழி. சமஸ்கிருதத்துக்கும், முந்தைய மொழி என்ற உண்மையை தைரியமாக சொன்னவர் பிரதமர் மோடி.
தமிழ் அழகான மொழி. தமிழர்கள் நல்லவர்கள் என்பதெல்லாம் ராகுல் காந்திக்கு இப்போதுதான் தெரிந்து இருக்கிறது. என் தாய்மொழி தமிழை அழகான தமிழ்மொழி என்று பாராட்டியதற்காக மகிழ்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.