தருமபுரம் ஆதினத்தின் புதிய ஆதீனமக பொறுப்பேற்றிருக்கும் ஶ்ரீலஷீ மாசிலாமணி சுவாமிகள், ஆதீனத்திற்கு சொந்தமான கோயில்களுக்கு, மடங்களுக்கும் பட்டினபிரவேசம் சென்றுவருகிறார். அந்தவகையில் திருப்பனந்தாளில் இன்று பட்டின பிரவேசம் செய்யவுள்ள நிலையில் திராவிடர் கழகத்தினர், நீலப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து ,"பட்டின பிரவேசம் என்பது மனிதனை மனிதன் தொழில் சுமக்கும் ஒரு மோசமான செயல்,"என போராட்டத்திற்கு தயாராகிவருகின்றனர்.
"நவீன காலத்திலும் பாசிசத்திற்கு எதிராக சமூக நீதி மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கின்ற போது, ஒரு மனிதனை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு உழைக்கும் மக்கள் செல்ல வேண்டும் என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல். இந்த செயலை எந்த சமூகம் செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டியது எங்களின் கடமை.
மடம் என்பது நிலவுடமையை கையில் வைத்துக்கொண்டு இங்கே வசிக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை நிலத்தின் மீது உரிமை அற்றவர்களாக்கி, ஒரு வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட பல லட்ச ரூபாய் மடத்தின் நிர்வாகத்திற்கு படியளந்த பின்புதான் வீடு கட்ட முடியும் என்ற நிலை இருக்கிறது.
அதுமட்டுமின்றி விவசாய நிலங்களில் உழைக்கிற விவசாயிக்கு நிலத்தின் மீது எந்த உரிமையும் அற்று விவசாயிகள் மீது மடம் என்னும் நிறுவனம் எதேச்சதிகாரம் செய்கிறது. ஆகவே உழைக்கிற ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மடாதிபதியை சுமக்கும் இந்த செயலை எதிர்த்தாக வேண்டியது எங்களின் கடமையாகும். எனவே பட்டின பிரவேசத்தை தடை செய்யக்கோரி திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது," என்கிறார்கள் திராவிடர் கழகத்தினர்.
இந்தநிலையில் மடத்திற்கு நெருக்கமானவர்கள், தருமபுரம், திருவாடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களுக்கு சொந்தமான நிலங்கள், கட்டிடங்கள், கடைகளை குத்தகைக்கு வைத்திருப்பவர்கள் அனைவரையும், பட்டினபிரவேசத்திற்கு ஆதரவாக வரவேண்டும் என அழைத்துள்ளது மடத்தின் நிர்வாகம், அதோடு திருவிடைமருதூர் டி.எஸ்.பி அசோகனுக்கும் போராட்டக்காரர்களை முன்கூட்டியே தடுத்து கைதுசெய்ய உத்தரவிட சொல்லியிருக்கின்றனர்.
அதன்படியே பந்தநல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் சுகுணா, திருப்பனந்தாள் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பிற்கு குவித்துள்ளனர்.
மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்சா முறையை கலைஞர் ஒழித்தார், அதைவிட கொடுமையான இந்த நிகழ்வை பலரும் கண்டித்துவருகின்றனர்.