இரண்டுநாள் பயணமாக, நேற்று (28/07/2022) மாலை தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று (28/07/2022) மாலை 06.00 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், அன்றிரவு அங்கேயே தங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (29/07/2022) காலை 10.00 மணியளவில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கி பாராட்டினார்.
பின்னர், அங்கிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு சாலை மார்க்கமாக கார் மூலம் சென்றார். அங்கு, தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பிரதமரை வழியனுப்பி வைத்தனர். குறிப்பாக, நேற்று (28/07/2022) பிரதமரை எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திற்கு வந்து வரவேற்ற நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வம் பிரதமரை சந்தித்து வழியனுப்பி வைத்துள்ளார். எனினும், இருவரும் பிரதமரைத் தனித்தனியே சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், "உடல்நிலை குறித்து பிரதமர் விசாரித்தார்; நலமாக இருப்பதாகக் கூறினேன். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும்" எனத் தெரிவித்தார்.