Skip to main content

சென்னை புத்தகக்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024

 

48ஆவது சென்னைப் புத்தகக்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று (27.12.2004 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணி அளவில் தொடங்கியது.  இந்த புத்தகக்காட்சியை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது நக்கீரன் ஆசிரியர், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ்குமார், தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த புத்தகக்காட்சி ஜனவரி 12ஆம் தேதி (12.01.2025) வரை நடைபெற உள்ளது. இந்த புத்தகக்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 17 நாட்கள் புத்தகக்காட்சி நடைபெறுகிறது. மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும் அனைத்து அரங்கிலும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பபாசியில் உறுப்பினரல்லாதவர்கள் விண்ணப்பித்த பெரும்பாலானோருக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென இந்த ஆண்டு தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழக அரசின் தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய அரசின் சாகித்திய அகாதமி, டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன் டிவிஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல்துறை, ஆகிய நிறுவனங்களும் கலந்துகொள்கின்றது. இல்லம் தேடிக் கல்வி இயக்கம் பங்கெடுக்கின்றது. உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களும் கலந்து கொள்கின்றது. ஒவ்வொரு நாள் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைகள் இடம் பெற உள்ளது. நிறைவு நாள் நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் விழா நிறைவுரை நிகழ்த்த உள்ளார். 

சார்ந்த செய்திகள்