Skip to main content

தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு! கட்டுப்படுத்த டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 13/07/2021 | Edited on 13/07/2021

 

Dengue spreading fast in Tamil Nadu! Dr. Ramdoss urges to control!

 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைக் கடந்த 5 மாதங்களாக ஆட்டிப்படைத்து வரும் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இன்னும் குறையாத சூழலில், டெங்கு காய்ச்சல் வடிவில் அடுத்த ஆபத்து தமிழகத்திற்கு வந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.

 

இது குறித்து தமிழக அரசை வலியுறுத்தியிருக்கும் அவர், “டெங்கு காய்ச்சல் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைத் தாக்குவது வாடிக்கையானதாகிவிட்டது. கடந்த 12 ஆண்டுகளாகவே டெங்கு காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது என்றாலும் கூட, டெங்கு வைரஸ் இன்னும் அதன் சக்தியை இழக்கவில்லை. கடந்த ஆண்டு முழுவதும் தமிழகத்தில் 2410 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் கடந்த வாரம் வரை மட்டுமே  2090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரமாக பரவிய டெங்கு இடையில் சில வாரங்கள் குறைந்த அளவிலேயே பரவியது. ஆனால், இப்போது மீண்டும் வேகமாகப் பரவத் தொடங்கி  உள்ளது. ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் 28 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

 

கடந்த சில நாட்களில் தென் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை இன்னும் முழு அளவில் வெளியாகவில்லை. அதனால் டெங்கு காய்ச்சல் பரவல் குறித்த தீவிரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. ஆனால், டெங்கு தீவிரமடைந்து வருகிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. டெங்குவைக் கட்டுப்படுத்தவும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவம் அளிக்கவும்  தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் டெங்கு காய்ச்சலும் பேரிழப்பை ஏற்படுத்திவிடக்கூடும்.

 

டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் நன்னீரில் தான் உருவாகின்றன. டெங்குவைப் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துவது தான்  டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் பணியாகும். தலைநகரம் சென்னை உட்பட எங்கெல்லாம் நீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளனவோ, அவை அனைத்தையும் சரி செய்ய வேண்டும். பயன்படுத்தப்படாமல் கிடக்கும் கொள்கலன்கள், வாகனங்களின் டயர்கள், சிரட்டைகள், பூந்தொட்டிகள், வாளிகள் உள்ளிட்டவற்றை அகற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதை ஒரு சிறப்பு இயக்கமாகவே நடத்த வேண்டும்.  எந்தெந்த பகுதிகளில் எல்லாம் கட்டிடங்களிலோ, கொள்கலன்களிலோ தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறதோ, அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்பதால், பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலம் டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

 

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவி வருவதால் மருத்துவத் துறையின் கவனம் முழுமையும் அதைக் கட்டுப்படுத்துவதில் தான் இருக்கிறது. டெங்கு காய்ச்சலும் இப்போது வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கி அனைத்து நிலை மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


டெங்கு காய்ச்சல் குறித்த அறிகுறிகள், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். டெங்கு காய்ச்சல் தாக்குவதைத் தடுக்க மக்களும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நில வேம்பு கசாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். அதேபோல், ரத்த அணுக்கள் குறையும் போது பப்பாளி சாறு அருந்தினால் அடுத்த இரு நாட்களில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  பொதுமக்கள் கடைபிடித்து டெங்கு காய்ச்சல் தங்களை நெருங்காமல் காக்க வேண்டும்.

 

டெங்கு காய்ச்சலைப் போலவே இன்னொரு அபாயமான ஸிகா காய்ச்சல் கேரளாவில் பரவி வருகிறது. தமிழ்நாட்டிற்குள் அந்த வகை காய்ச்சல் நுழையாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும். எனவே, டெங்கு, ஸிகா காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் ‘’ என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

 

 

சார்ந்த செய்திகள்