எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விசக்காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகின்றன. தற்போது பெய்துவரும் மழை காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளன. முறையான முன்னெச்சரிக்கை இல்லாத காரணத்தால் தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன.
தமிழக சுகாதாரத்துறை டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தாலும், தினந்தோறும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய வசதிகள் இன்மையால் தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடிச்செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இந்நிலையில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபடபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே காய்ச்சல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் நிரம்பிவரும் நிலையில், மருத்துவர்களின் போராட்டம் மேலும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மருத்துவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடச் செய்ய வேண்டும்.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையை முடுக்கி விட வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டெங்குவால் ஏற்படும் உயிர் இழப்புகளை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்பி, டெங்குவை கட்டுப்படுத்த அவசர நிலைப்பிரகடனம் செய்து போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் டிரான்ஸ்பார்ம், மின்சார வயர்களில் ஏற்படும் மின்கசிவை தடுக்க போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு உயிரிழப்புகள் ஏற்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.