வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசிப்பவர்கள் அருள் அனிதா தம்பதியினர். இந்த தம்பதியின் இரண்டாவது மகன் அரிஷ். 8 வயதாகும் ஹரிஷ்க்கு சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதித்தபோது, அது டெங்கு காய்ச்சல் என தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஒரு வாரத்துக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த ஹரிஷ், அக்டோபர் 30ந்தேதி மதியம் உயிரிழந்துள்ளார்.
அக்குழந்தையின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அக்கிராம மக்கள் டெங்கு காய்ச்சலை தடுக்காத அரசாங்கத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தினர். ஆம்பூர் வட்டாட்சியர் ரமேஷ் நேரில் சென்று விசாரணை நடத்தியதோடு, மக்களை சமாதானம் செய்துவிட்டு வந்துள்ளார்.
கடந்த வாரம் திருப்பத்தூரை சேர்ந்த எல்.கே.ஜி படிக்கும் 3 வயது சிறுமி உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது. அடுத்தடுத்து டெங்கு காய்ச்சலுக்கு வேலூர் மாவட்டத்தில் மக்கள் பலியாவதும், அதிலும் குறிப்பாக குழந்தைகள் பலியாவது தாய்மார்களை வேதனையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.