![Demonstration demanding the release of those in special camps!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZGrZU1ylCohDbiFNMcDwP6bCNVJWE8uLXlI32Xsz2DY/1656506164/sites/default/files/inline-images/th_2707.jpg)
திருச்சி மத்திய சிறைச்சாலையில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இம்முகாமில் இந்தோனேசியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதைப் போல் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஈழத் தமிழர்கள் சுமார் 108 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை விடுதலை செய்ய வலியுறுத்திக் கடந்த மாதம் 20ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழத்தமிழர் உமா ரமணன் என்பவர் முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி குடந்தை அரசன், தமிழக ஜனநாயக கட்சி கே.கே ஷெரீப், தமிழர் விடியல் கட்சித் தலைமை நிர்வாகி ஆகியோர் தலைமையில் பல்வேறு தமிழ் அமைப்புகள் மத்திய சிறைச்சாலை உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிடப் போவதாக அறிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.