திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ர. முகமது தௌஃபீக் ராஜா (வயது 24). இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அம்மாகுளம் பகுதி கிளை செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அரியமங்கலம் பகுதியில் நின்றிருந்த போது, திடீரென சுமார் 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளுடன் அவரைச் சுற்றி வளைத்து கொலை செய்யும் நோக்கில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் உடல், தலை மற்றும் கைகள் என சுமார் 10 இடங்களில் வெட்டு விழுந்த நிலையில் அலறியபடி ரத்த வெள்ளத்தில் அவர் விழுந்ததும் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
அதன் பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரியமங்கலம் காவல் ஆய்வாளர் திருவந்தம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தௌஃபீக் ராஜா செயல்பட்டு வந்ததால் அதைப் பிடிக்காத மர்ம கும்பல் அவரைக் கொலை செய்யும் நோக்குடன் இந்த கொலைவெறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அரியமங்கலம் முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த ப. நிஷாந்த் என்கிற பன்னீர்செல்வம் (வயது 23), அம்மாகுளம் பகுதி எல். ஆசைமுத்து (வயது 24), காந்திஜி தெரு ஆ.சந்தோஷ்குமார் (வயது 20), செ.பாலாஜி (வயது 20), உக்கடை திருப்பூர் குமரன் தெருவைச் சேர்ந்த ரா.ரெங்கா என்கிற ரங்கநாதன் (வயது 19) உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் மேலும் 17 வயது சிறுவன் ஒருவரையும் பிடித்து சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாவட்டத் தலைவர் லெனின் தலைமையில் வியாழக்கிழமை நள்ளிரவு திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.