Skip to main content

மேஜைகள் குறைப்பு...? தாமதமாகும் தமிழகத் தேர்தல் முடிவு...?

Published on 20/04/2021 | Edited on 20/04/2021

 

Delayed election results ...?

 

சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்காக தமிழகம் காத்திருக்கிறது. 'ஸ்ட்ராங் ரூம்' எனப்படும் கட்டுப்பாட்டு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

 

இந்நிலையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு தலைமையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் கரோனா இரண்டாம் அலை பரவல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் வாக்கு எண்ணும் ஒவ்வொரு மையத்திலும் வாக்கு எண்ணும் மேஜைகளைக் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் இருக்கும் நிலையில், கரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியைப் பின்பற்றுவதற்காக, 7 அல்லது 10 மேஜைகளாகக் குறைக்கப்படவுள்ளது. மேஜை எண்ணிக்கை ஏழா? அல்லது பத்தா? என்பதை வாக்கு எண்ணும் மையத்தின் பரப்பளவைப் பொறுத்து இறுதி செய்யப்பட உள்ளது. கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தது.

 

அதிக வாக்குச்சாவடிகள் உள்ள தொகுதிகளில் 40 சுற்றுகளுக்கு மேல் வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணப்படும் மையங்களில் மேஜைகள் குறைக்கப்படுவதால் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது முடிவுகள் வெளியாக தாமதம் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேஜைகள் குறைக்கப்படுவது குறித்து மீண்டும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாஹு நாளை ஆலோசிக்க உள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்