Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; மாமியார், மாமனாரைக் கொன்ற மருமகள்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Daughter-in-law who incident father-in-law and poisoned mother-in-law

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள இலங்கியனூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் வேல்முருகனுக்கும்(39), விருத்தாசலம் தங்கமணி கார்டனைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் பூமாலை என்பவரின் மகள் கீதாவுக்கும்(33) பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில் கீதாவுக்கு விருத்தாசலம், புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வசித்து வரும் ஹரிஹரன்(44) என்பவருடன் திருமணம் கடந்த உறவு ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர். இவர்கள் பழகும் விஷயம் தெரிந்த கீதாவின் மாமியார் ஜெயந்தியும், மாமனார் சுப்பிரமணியனும் இதனைக் கண்டித்துள்ளார்கள். இதனால் ஆத்திரம் கொண்ட கீதா கடந்த 29.12.2021 அன்று மதியம் 01.00 மணிக்கு தனது கணவரின் சொந்த ஊரான இலங்கியனூருக்குச் சென்று அங்கு தனது மகன்கள், கணவர் வேல்முருகன் மற்றும் மாமியார் கொளஞ்சி, மாமனார் சுப்பிரமணியன் ஆகியோருக்கு முள்ளங்கி சாம்பார் வைத்து அதில் எலி பேஸ்ட் விஷத்தினை கலந்து மாமனார் மற்றும் மாமியார் இருவருக்கும் சாப்பிடக் கொடுத்துள்ளார்.

 

அந்த விஷம்  கலந்த சாம்பார் உணவினை சாப்பிட்ட மாமியார், மாமனார் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபு என்பவரின் மகன் நித்தீஸ்வரன்(10) ஆகிய மூவருக்கும் அடுத்தடுத்து உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின் சிகிச்சை பலனின்றி மாமியார் கொளஞ்சியும், மாமனார் சுப்பிரமணியனும், நித்தீஸ்வரனும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இது தொடர்பாக சந்தேகமடைந்த கணவர் வேல்முருகன் கொடுத்த புகார் மனுவின் பேரில் கடந்த 06.01.2022 அன்று மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 

மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் ராமதாஸ் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு கீதா மற்றும் அவருடன் பழகி வந்த ஹரிஹரன் ஆகிய இருவரையும் இன்று(24.05.2023) அதிகாலை கைது செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுவன் உட்பட மூன்று பேரை விஷம் வைத்துக் கொன்ற ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியின் மகளையும் அவருடன் பழகி வந்த நபரையும் ஒன்றரை ஆண்டுகள் கழித்து கைது செய்திருப்பது காவல்துறையின் அலட்சியப் போக்கை காட்டுவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்