கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவர் மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இதன் மூலம் இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக நாதக உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேட்சை என மொத்தம் 29 பேர் களத்தில் உள்ளனர்.
அதே சமயம் அதிமுக, தேமுதிக ஆகிய இருகட்சிகளும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக தலைவரும், நடிகருமான விஜய் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதனால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த வகையில் இன்று விக்கிரவாண்டியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விக்கிரவாண்டி அடுத்த கெடார் கிராமத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஒரத்தூர் பொதுக்கூட்டத்தில் நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்டமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பிரசாரம் செய்தனர்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்லில் நாளை மறுதினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் தேர்தலுக்கான பரப்புரை இன்று (08.07.2024) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. விக்கிரவாண்டியில் கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த அரசியல் கட்சியினரின் தீவிர பரப்புரை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிப்படி மாலை 6 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கவும், பரப்புரை மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விக்கிரவாண்டியில் இருந்து வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் உடனடியாக வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டியில் ஜூலை 10 இல் வாக்குப்பதிவு நடைபெற்று ஜூலை 13 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.