தமிழக பாஜகவின் மாவட்டத் தலைவருக்கு கிடுக்குப்பிடி போட்டிருக்கிறது தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத்துறை.
தென் சென்னை பாஜகவின் மாவட்டத் தலைவராக இருக்கிறார் காளிதாஸ். இவர் மேற்கு சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். மத்திய மோடி அரசின் மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் மக்கள் மருந்தகம் (பிரதான் மந்திரி பாரதிய ஜனஉஷாதி கேந்திரா) எனும் மருந்துக் கடையைத் தனது மனைவியுடன் இணைந்து நடத்தி வருகிறார் காளிதாஸ்.
பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டு வரும் இந்த மருந்துக் கடை குறித்து தமிழக அரசின் மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு பல புகார்கள் போயிருக்கிறது. இதனையடுத்து, இந்தப் புகாரின் மீது சென்னை மண்டலம்-lll இல் இயங்கும் மருந்து கட்டுப்பாட்டுத்துறையின் உதவி இயக்குநர் அலுவலகம் நடத்திய விசாரணையில், அந்த மருந்துக் கடையில் காலாவதியான மருந்துகள் இருப்பதும், போதை மாத்திரைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, காளிதாஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது சென்னை சைதாப்பேட்டை மேஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை அன்று ஆஜராக காளிதாசுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கிய நிலையில், கமலாலயத்திற்கும் செய்தி பரவ, பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.