ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட தொட்டாபுரம் வனப்பகுதியில் கடந்த மே மாதம் 26-ந் தேதி தலமலை வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அடர்ந்த வனப்பகுதியில் ஒரு சாக்கு மூட்டை கிடந்துள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து உடனடியாக தாளவாடி போலீசுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே மனித எலும்புகள் இருந்தது தெரிய வந்தது. மனித எலும்பை கைப்பற்றிய போலீசார் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த மனித எலும்புகள் யாருடையது? யாராவது ? கொலை செய்யப்பட்டு சாக்குமூட்டையில் கட்டி வனப்பகுதியில் வீசப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் தாளவாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் தொட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் மாயமானதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனால் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் குமாருடையதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதைத் தொடர்ந்து குமாரை பற்றி தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். இந்நிலையில் தொட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமல்லு என்பவர் தலமலைக் கிராம நிர்வாக அலுவலரிடம் குமாரை கொலை செய்ததாக கூறி சரணடைந்தார். பின்னர் அவரைத் தாளவாடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். நாகமல்லு போலீசாரிடம் குமாரைக் கொன்றது குறித்து பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:- நானும் என் அம்மா முத்துமணியும் தொட்டாபுரம் தோட்டத்தில் வசித்து வருகிறோம். என் தந்தை ராமசாமி டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருகிறார். எனது தம்பி கோவையில் தனியார் நிறுவனத்தில் பணி செய்துவருகிறார். என் அம்மாவுக்கும், குமார் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதுபற்றி எனக்கு தெரிய வந்ததும் நான் குமாரை கூப்பிட்டு எச்சரித்தேன். ஆனால் அவர் தொடர்ந்து எனது தாயுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நான் தோட்டத்தில் இருந்து வீட்டிற்கு வரும் போது குமாரும் எனது தாயும் தனிமையில் இருந்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்தேன். குமாரைக் கயிற்றால் கட்டி வைத்து காலையில் போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தேன். ஆனால் குமார் தொடர்ந்து என்னைத் தகாத வார்த்தையில் திட்டி கொண்டு இருந்தார். ஆத்திரத்தில் அருகில் இருந்த சுத்தியால் தலையில் அடித்தேன். இதில் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க எனது பெரியப்பா மகன் மாதேவனை துனைக்கு அழைத்து குமார் உடலை மறைக்க திட்டம் தீட்டினோம். இதற்கு என் தாயும் உடந்தையாக இருந்தார். வனப்பகுதியில் உடலை வீசி விட்டால் வனவிலங்குகள் தின்று விடும் என நினைத்து உடலை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று வீசிவிட்டு வந்து விட்டோம்.
யாரும் எங்களை கண்டு பிடிக்க வில்லை என நினைத்து கொண்டிருந்தோம். ஆனால் கடந்த ஜீன் 26 ஆம் தேதி வனத்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது எலும்புகளை பார்த்து போலீசாரிடம் தெரிவித்து விசாரணை மேற்கொண்டனர். எப்படியும் போலீசாரிடம் மாட்டி விடுவோம் என நினைத்து கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து தாளவாடி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து நாகக்மல்லு, மாதேவன், முத்துமணி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நாகமல்லு , மாதேவன் ஆகியோர் கோபி மாவட்ட சிறையிலும், முத்துமணி கோவையில் உள்ள பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.