கடலூரில் டி.எஸ்.பி. உட்பட எட்டு காவலர்களுக்கு கரோனா தொற்று பரவியிருப்பது கடலூர் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நோய் பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒரே நாளில் 71 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் திட்டக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் தலைமைக் காவலர்கள் உட்பட 8 போலீசாருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக சிகிச்சை பெற்று வந்த விருத்தாசலம் வட்டாட்சியர் கவியரசு கடந்த வாரம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து திட்டக்குடி காவல் உட்கோட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்துக் காவல்துறையினருக்கும் முறையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் திட்டக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் அவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர், ஆவினங்குடி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒரு தலைமைக் காவலர், அதிவிரைவு படையைச் சேர்ந்த 4 ஆயுதப்படைக் காவலர்கள் என மொத்தம் 8 காவலர்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், எட்டு காவல்துறையினரையும் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டி.எஸ்.பி. உட்பட எட்டு காவலர்களுக்கு கரோனா தொற்று பரவியிருப்பது கடலூர் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.