தமிழகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் கோவை மாநகரில், ஏராளமான தொழில் நிறுவனங்கள் ஐ.டி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரில் வசதி படைத்த பெண்கள், கணவனை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்கள், தனியாக தங்கி பணியாற்றிவரும் பெண்கள் உள்ளிட்டோரை குறிவைத்து சில கும்பல்கள் மோசடியில் ஈடுபட்டு வருகிறது.
ஆரம்பத்தில் இந்த கும்பல் சமூக வலைத்தளம் அல்லது வேறு தளங்கள் வழியாக சம்பந்தப்பட்ட பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொள்கின்றனர். பின்னர், சில காலம் சென்றதும் அந்த பெண்ணை மிரட்டி பணம் பறிப்பது, பொருட்களை வாங்குவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பாதிக்கப்படும் ஒரு சில பெண்கள் மட்டுமே, தைரியமாக இதனை எதிர்கொண்டு காவல் நிலையம் சென்று புகார் அளிக்கின்றனர். பல பெண்கள் புகார் அளிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் கும்பல் குறித்து அதன் செயல்பாடுகள் குறித்தும் கோவை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீப காலமாக நல்ல வசதி படைத்த தனிமையில் இருக்கும் பெண்களுடன் நட்பு வளர்த்துக் கொண்டு பின்னர் அந்தப் பெண்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே தனிமையில் இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லாத அல்லது முன்பின் தெரியாத நபர்களுடன் பேசி பழக்கம் வைத்துக் கொள்வதில், கவனமாக செயல்பட வேண்டும். அவ்வாறு பழகினால் தங்களைப் பற்றி தனிப்பட்ட தகவல்களை எந்தக் காரணத்தை முன்னிட்டும், அவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. இதுபோன்ற நபர்களால் பிரச்சனைகளை சந்தித்தால், மாநகர காவல்துறையில் புகார் அளிக்கலாம்.
இது போன்ற புகார்களில் பெண்களின் பெயர்களை ரகசியமாக வைக்கப்படும். மேலும் மாநகர காவல் துறை சார்பில் பெண்கள் புகார் அளிக்க வசதியாக, பிரத்யேக க்யூ ஆர் கோடு அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்கள் கல்லூரி, பொது இடங்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகர காவல்துறை பக்கத்திலும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோடு பயன்படுத்தி தங்களது புகார்களை பெண்கள் பதிவு செய்யலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் இரவு பணி முடிந்து தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த பொது மக்களிடம் மாநகர காவல் துறை சார்பில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்தியேக க்யூ ஆர் கோடு வெளியிடப்பட்டு உள்ளது இந்த க்யூ ஆர் கோடினைப் பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளன குறிப்பாக இரவு பணி முடிந்து செல்லும் பெண்கள் போக்குவரத்தில் செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? இரவில் தனியாக செல்லும் போது நீங்கள் எப்பொழுதாவது துன்புறுத்தலை அனுபவிக்கிறீர்களா? அல்லது சங்கடமாக உணர்ந்துள்ளீர்களா? இரவு நேர பயணத்திற்கு பாதுகாப்பற்ற பகுதிகள் அல்லது தெருக்கள் என எதைக் கருதுகிறீர்கள்? நீங்கள் பணிபுரியும் இடத்தில் இரவு நேரத்தில் பாதுகாப்பாக செல்ல உங்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் உதவி குறிப்புகள் வழங்கப்படுகிறதா? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு உள்ளது. இதனைப் பொதுமக்கள் அல்லது பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பூர்த்தி செய்யலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது.